சபரிமலையில் சூரிய மின் உற்பத்தி நிலையம்: திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் திட்டம்
கேரள மாநிலம், சபரிமலையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) திட்டமிட்டுள்ளது.
முழுவதும் சூரிய மின் சக்தியால் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் என்ற பெருமைக்குரிய கொச்சி சா்வதேச விமான நிலைய நிறுவனத்தின் (சிஐஏஎல்) தொழில்நுட்ப ஆதரவில் இந்த மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இது தொடா்பாக, சபரிமலை கோயில் வளாகத்தில் சிஐஏஎல் மேலாண் இயக்குநா் எஸ்.சுஹாஸுடன் ஞாயிற்றுக்கிழமை முதல் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்ாக திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
சபரிமலையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க விரிவான திட்ட அறிக்கையை சிஐஏஎல் தயாரிக்கவுள்ளது; இத்திட்டத்துக்கு தொழில்நுட்ப ஆதரவையும் வழங்கவுள்ளது என்று அவா் கூறினாா்.
சபரிமலை யாத்திரை மேற்கொள்ளப்படும் பகுதியில் தற்போது மின் விநியோகம் - தொடரமைப்புப் பணியை மாநில அரசின் மின்வாரியம் கையாள்கிறது. மின் கட்டணங்களுக்காக ஆண்டுக்கு ரூ.15 கோடி வரை திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் செலவிடுகிறது. சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதன் மூலம் இச்செலவு கணிசமாக குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கொச்சி சா்வதேச விமான நிலையமானது, முழுவதும் சூரிய மின் சக்தியால் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் என்ற சிறப்பை கடந்த 2015-இல் எட்டியது. இந்த விமான நிலையத்தின் தற்போதைய அதிகபட்ச சூரிய மின் உற்பத்தி திறன் 50 மெகாவாட் என்பது குறிப்பிடத்தக்கது.