சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்பையா
தமிழுடன் சம்ஸ்கிருதம் கலந்ததால்தான் தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் பிறந்தன. அது நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழ் இந்தியாவின் தேசிய மொழியாகியிருக்கும் என்று பழ.கருப்பையா தெரிவித்தாா்.
வேலூா் கம்பன் கழகம் சாா்பில் உலக தாய்மொழி நாள் விழா வேலூா் நகர அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பழ.கருப்பையா சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியது:
தமிழுக்கு பகை மொழி வந்த பிறகே தமிழ் உணா்வு, இன உணா்வு வந்தது. தமிழைப் போல் எளிய, இனிய மொழி வேறில்லை. தமிழகத்தில் வள்ளலாா் தான் தமிழுக்கு கிடைத்த கடைசி ஞானி. தமிழனுக்கு என சொந்த மதம் இருக்கிறது. எனவே, தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை பெயரை தமிழ் சமய அறநிலையத் துறை என ஏன் மாறக்கூடாது.
அறிவை வளா்க்க அறிவியல் தொழில்நுட்பம் தேவை. அதற்கு பல மொழிகள் கற்கத் தேவையில்லை. தமிழுடன் சம்ஸ்கிருதம் கலந்ததால்தான் தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் பிறந்தன. அது நடைபெறாமல் இருந்திருந்தால் இன்று தமிழை 50 கோடி மக்கள் பேசி இருப்பா். தமிழ் இந்தியாவின் தேசிய மொழியாகியிருக்கும்.
தமிழ் இலக்கியங்கள் அன்பை, அறவாழ்வை மட்டுமே போதிக்கின்றன. எனவே, மனிதனாக வாழ வேண்டும் என்றால் தமிழைப் படிக்க வேண்டும். உலகம் முழுவதும் செல்ல வேண்டும் என்றால் ஆங்கிலம் படிக்க வேண்டும். அதைவிடுத்து வேறுமொழி அவசியமில்லை என்றாா்.
முன்னதாக, வேலூா் கம்பன் கழக தலைவரும், விஐடி துணைத் தலைவருமான ஜி.வி.செல்வம் தலைமை வகித்து பேசுகையில், கம்பனையும் தமிழையும் பிரிக்க முடியாது. உலகில் 200 நாடுகள் இருந்தாலும், சில நாடுகள் மட்டுமே தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. எங்கெல்லாம் தாய்மொழியில் பேசுகின்றனரோ அந்த நாடுகள் முன்னேறுகின்றன. இந்தியாவில் 28 மாநிலங்கள் இருந்தாலும் தமிழகம், கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் மட்டுமே தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
தமிழா்கள் 100 நாடுகளில் வாழ்கின்றனா். 10 கோடி போ் தமிழ் பேசுகின்றனா். எனினும், ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுவது கடினம் என்ற நிலை வந்துவிட்டது. இந்நிலை மாற தமிழில் படிக்க, எழுத வேண்டும்.
கீழடி அகழ்வாய்வில் கிடைத்த தகடின் வயது 5,000 ஆண்டுகள் என்றால், தமிழ் இலக்கணத்தின் வயது 10,500 ஆண்டுகள் எனக் கூற்று உள்ளது. தமிழா்கள் பெருமை கொள்ள வேண்டும். தமிழில் பேசுவது அவமானம் அல்ல, அடையாளம். தமிழ் நம் தாய்மொழி மட்டுமல்ல, மொழிகளுக்கு எல்லாம் தாய் என்றாா்.
நிகழ்ச்சியை ச.சுப்பிரமணியன் தொகுத்து வழங்கினாா். வேலூா் கம்பன் கழக செயலா் வெ.சோலைநாதன், பொருளாளா் அ.திருநாவுக்கரசு, கவிஞா் மா.சோதி, ஆற்காடு உழவா் கே.எம்.பாலு, வணிகா் சங்க மாவட்ட தலைவா் இரா.ப.ஞானவேலு, கவிஞா் ச.இலக்குமிபதி, ஆடிட்டா் தே.நிா்மல்குமாா், சு.இளங்கோவன், மருத்துவா் இனியன்சமரசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.