ஆஸி. ஓபன்: இந்திய வம்சாவளி இளம் வீரருக்கு ஜோகோவிச் பாராட்டு!
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு- ஆளுநர் விருது அறிவிப்பு
ஆளுநர் விருது-2024 சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வென்றவர்களின் விவரங்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆளுநர் விருது 2024 'சமூக சேவை' மற்றும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வென்றவர்களின் விவரங்களை தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அறிவிக்கிறது. கடந்த ஆண்டு 28 ஜூன் 2024 அன்று இவ்விருதுகளுக்கான அறிவிப்பினை தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டது. இந்த இரு விருதுகளும் சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரித்து அவர்களை பாராட்டி ஊக்குவிப்பதற்காக ஆளுநர் மாளிகை சார்பாக அறிவிக்கப்பட்டது.
இவ்விருதுகளுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட முக்கிய பிரமுகர்களை உள்ளடக்கிய தேர்வக் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு தேர்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 'சமூக சேவை' மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரு பிரிவுகளின் கீழ் விருதுகள் வென்றவர்களின் விவரங்களை தமிழ்நாடு ஆளுநர் மாளிகை பின்வருமாறு அறிவிக்கிறது.
'சமூக சேவை' (நிறுவனம்) பிரிவில், கோயம்புத்தூர் மாவட்டம் 'இதயங்கள்' மற்றும் சென்னை மாவட்டம் 'ஹோப் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட்' ஆகிய இரு அமைப்பிற்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். 'இதயங்கள்' அமைப்பானது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு பராமரிப்பு தேவைப்படும் ஏழைக் குழந்தைகளுக்கு சேவை செய்து வருகிறது. ஹோப் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட், ஆட்டிசம் மற்றும் அறிவுசார் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி, தொழில் பயிற்சி மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டு வருகிறது.
'சமூக சேவை' (தனிநபர்கள்) பிரிவில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். இராமலிங்கம், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.சொர்ணலதா மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.ராஜ்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆளுநர் மாளிகையின் சார்பாக வழங்கப்படும். எஸ்.இராமலிங்கம், கடந்த 33 ஆண்டுகளாக சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். ஜே.சொர்ணலதா, 2009 ஆம் ஆண்டு தண்டுவட மரபு நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும், நரம்புத்தசை கோளாறுகள் மற்றும் பல்வேறு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதில் தன்னை ஈடுப்படுத்தி கொண்டுள்ளார். ஏ.ராஜ்குமார், வீதிகளில் வாழும் முதியோர்கள், ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னலமற்ற முறையில் சேவை செய்து வருகிறார்.
லெபனான்: ஒப்பந்தத்தை மீறி தாக்குதலைத் தொடரும் இஸ்ரேல்! 3 பேர் பலி!
'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' (நிறுவனம்) பிரிவில் 'சிட்லபாக்கம் ரைசிங் தொண்டு அறக்கட்டளை' (Chitlapakkam Rising Charitable Trust) என்ற சென்னையை சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பிற்கு ரூ.5 லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வமைப்பு அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பாகும். சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்த விழிப்புணர்வை பரப்புதல், நீர்நிலைகள் மேலாண்மை, பசுமையாக்கம், கழிவு மேலாண்மை போன்றவற்றில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது.
மேற்படி 'சமூக சேவை' மற்றும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு வருகின்ற 26.01.2025 அன்று சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநரால் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.