சம்பல் வழக்கு: மசூதி அருகேயுள்ள கிணற்றைப் பராமரிக்க உ.பி. அரசு கோரிக்கை!
உ.பி. சம்பலில் உள்ள ஜாமா மசூதி அருகேயுள்ள கிணற்றைப் பராமரிக்க அனுமதிக்குமாறு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், முகலாய ஆட்சியாளா் பாபா் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் கடந்த ஆண்டு நவ. 24-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 பேர் பலியாகி, பலர் காயமடைந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், ஜாமா மசூதியின் வாயிலுக்கு அருகேயுள்ள தரணி வராஹ் கூப் என்றழைக்கப்படும் கிணற்றைப் பராமரிக்க அனுமதிக்குமாறு மசூதி நிர்வாகம் மனு தாக்கல் செய்திருந்தது.
இதையும் படிக்க | சம்பல் வன்முறை: துபை கேங்ஸ்டரின் உதவியாளர் கைது!
அந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்த உ.பி. அரசு, கடந்த மாதம் வெளியான உத்தரவின் பேரில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சம்பல் ஜாமா மசூதியின் வெளியே உள்ள கிணற்றில் உள்ளுர் நிர்வாகத்தினர் பூஜை செய்வதற்கு கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. பொதுமக்கள் அந்தக் கிணற்றைப் பயன்படுத்தலாம், ஆனால் பூஜை செய்ய அனுமதியில்லை என தெரிவித்திருந்தது. மசூதி நிர்வாகத்தினர் அந்தக் கிணற்றை மசூதியின் ஒரு பகுதியாகக் கூறிய நிலையில் அதனை எதிர்த்து உ.பி. அரசு இன்று பதில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் யோகி ஆதித்யநாத் அரசு தெரிவித்துள்ளதாவது:
’கிணறுகளைப் புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ள நிலையில் அந்த முயற்சியைத் தடுக்கும் விதமான நடவடிக்கை சட்டவிரோதமானது.
கிணறு பொது இடத்தில் அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட மசூதிக்கு வெளியே கிணறு அமைந்துள்ளது. உள்ளே அல்ல. கிணற்றுக்கும் மசூதிக்கும் சம்பந்தம் இல்லை.
மசூதியின் எல்லைக்குள் தனியே ஒரு கிணறு அமைந்துள்ளதை மசூதி நிர்வாகம் தெரிவிக்கவில்லை’ என்று கூறியுள்ளனர்.
இதையும் படிக்க | கும்பமேளா நாளையுடன் நிறைவு! கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!
அரசின் கூற்றுப்படி, அந்தக் கிணறு வரலாற்று ரீதியாக அனைத்து சமூக மக்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற வகுப்புவாத கலவரங்களின்போது கிணற்றின் ஒரு பகுதியில் காவல்துறை முகாம் கட்டப்பட்டது. மற்றொரு பகுதி பயன்பாட்டில் இருந்தது. கடந்த2012 ஆம் ஆண்டு அந்தக் கிணறு முற்றிலுமாக மூடப்பட்டது. தற்போது அதில் நீர் இல்லை’ எனத் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தால் மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் சேகரிப்பு, பொது பயன்பாடு போன்ற காரணங்களுக்காக சீரமைக்கப்பட இருக்கும் பழமையான 19 கிணறுகளில் இந்தக் கிணறும் ஒன்று.
இந்த முயற்சியின் மூலம் சம்பல் பகுதி சுற்றுலாத் தளமாக மாற்றப்படவுள்ளது. இந்த முன்னெடுப்பில் முதற்கட்டமாக 14 கிணறுகளை சீரமைக்க ரூ. 1.23 கோடி ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் சம்பலில் கிணறுகள் சீரமைக்கும் பணி முக்கியமானது என அரசு நிர்வாகம தெரிவித்துள்ளது.