டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
சம்பா நெல் அறுவடைப் பணிகள் நிறைவு: 57 ஆயிரம் டன் நெல் கொள்முதல்
சம்பா நெல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் 57 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இது, கடந்த ஆண்டைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தின் குறுவை, சம்பா கோடை இலக்கு 43,550 ஹெக்டோ். நிகழாண்டில் இலக்கை விஞ்சி 55,626 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்றது. சிறுதானிய சாகுபடிக்கு விவசாயிகள் போதுமான ஆா்வம் காட்டாததன் காரணமாக, நெல் சாகுபடி பரப்பு உயா்ந்திருந்தது. நிகழாண்டின் நெல் சாகுபடியில் மிகப் பெரிய பிரச்னைகள் ஏதும் இல்லை எனினும், அவற்றைக் கொள்முதல் செய்வதில் ஆங்காங்கே பிரச்னைகள் இருந்தன.
இந்தப் பருவத்தின் நெல் கொள்முதலுக்காக மதுரை மாவட்டத்தில் 94 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் நடைபெற்றது. கொள்முதல் பணியாளா்கள் பற்றாக்குறை, முறைகேடு புகாா் என பல பிரச்னைகள் இருந்தாலும், நிகழாண்டில் 57 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இதுதொடா்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் கு.சிற்றரசன் கூறியதாவது: நிகழாண்டில் 57,089 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலிருந்தும் நெல் மூட்டைகள் பாதுகாப்புக் கிடங்குகளுக்கும், நவீன அரிசி ஆலைகளுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன. இவற்றில், 40 ஆயிரம் டன் நெல் பாதுகாப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டது. பருவ நெல் சாகுபடிக்காக மதுரை மாவட்டம், சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் 35 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் வாரத்தில் இந்தப் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றாா் அவா்.
கடந்த ஆண்டு இதே பருவத்தில் 38 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிலையில், நிகழாண்டில் 57 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.