வெங்காயம் கிலோ ரூ. 18-க்கு விற்பனை: காய்கறிகள் விலையும் குறைந்தது
சர்வதேச எல்லையைத் தாண்டிய இந்திய BSF அதிகாரி; சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தியா மட்டுமில்லாது உலக நாடுகள் பலவும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அதேசமயம், "இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் உடனடியாக மறுப்பும் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் இதுவரை பாகிஸ்தான் மீது நேரடியாக எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்காத மோடி அரசு,
"சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து.
வாஹா - அட்டாரி எல்லை உடனடியாக மூடல்.
பாகிஸ்தானியர்களுக்கு SVES விசாக்கள் உட்பட அனைத்து வகையான விசாக்களும் ரத்து.
இந்தியாவிலிருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உள்பட அனைத்து பாகிஸ்தானியர்களும் உடனடியாக 72 மணிநேரத்தில் இந்தியாவிலிருந்து வெளியேற உத்தரவு" ஆகிய முடிவுகளை எடுத்திருக்கிறது.
இதற்கு எதிர்வினையாகப் பாகிஸ்தான் அரசு, "சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து நீரை நிறுத்துவது போர் நடவடிக்கை. இதற்கு முழு பலத்துடன் நாங்கள் பதிலளிப்போம்.
மேலும், சிம்லா ஒப்பந்தம் உள்பட இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தும் உரிமையை நாங்கள் பயன்படுத்துவோம்" என்று எதிர்வினையாற்றியிருக்கிறது.
இந்த நிலையில், இந்திய எல்லை பாதுகாப்புப் படை (BSF) அதிகாரி ஒருவர் சர்வதேச எல்லையைத் தாண்டியதாகப் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்துவைக்கப்பட்டிருக்கிறார்.

பி.கே.சிங் என்றறியப்படும் அந்த அதிகாரி, நேற்று மதியம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் செக்டரில் சர்வதேச எல்லையைத் தவறுதலாகக் கடந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது, பிடித்துவைக்கப்பட்டிருக்கும் அந்த அதிகாரியைப் பாதுகாப்பாக மீட்கும் நோக்கில், பாகிஸ்தான் ராணுவத்தினருடன் இந்திய ராணுவத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
