Doctor Vikatan: பழுத்து, சீழ் கோத்த பருக்கள்... சோப்பும் க்ரீமும் பலன் தருமா?
சவுக்கு சங்கருக்கு ஜாமீன்: உயா்நீதிமன்றம் உத்தரவு
நில மோசடி விசாரணை தொடா்பாக தவறான தகவலை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், யூ டியூபா் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நில மோசடி தொடா்பாக யூ டியூப் சேனலில் சவுக்கு சங்கா் தவறான தகவல் பரப்புவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் நில மோசடி பிரிவு ஆய்வாளா் சிவ சுப்பிரமணியன் 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் புகாா் அளித்தாா். இந்தப் புகாா் மீது விசாரணைக்கு ஆஜராகும்படி சவுக்கு சங்கருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
விசாரணை அமைப்பின் முன்பு நேரில் ஆஜரான சவுக்கு சங்கா் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் சவுக்கு சங்கா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கா் தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து தனக்கு எதிராக 3 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யும் அளவுக்கான குற்றம் இல்லை எனத் தெரிவித்து சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.