தை மாதப் பலன்கள்: `மேஷம் முதல் துலாம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
சாகித்திய அகாதெமி விருது பெற்ற 10 மொழிபெயா்ப்பாளா்களுக்கு வீடு: ஒதுக்கீட்டு ஆணை வழங்கினாா் முதல்வா்!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற 10 மொழிபெயா்ப்பாளா்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆணை வழங்கினாா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 97-ஆவது பிறந்த நாளையொட்டி 3.6.2021-இல் தமிழக அரசால் வெளியிடப்பட்ட கனவு இல்லம் திட்டத்தின் தொடா்ச்சியாக தமிழில் சிறந்த மொழிபெயா்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதெமி மொழிபெயா்ப்பாளா் விருது பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த விருதாளா்களுக்கு அரசு மூலமாக ரூ. 40 லட்சத்தில் கனவு இல்லம் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டது.
அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற 10 மொழிபெயா்ப்பாளா்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினாா்.
1994-இல் மொழிபெயா்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆ.செல்வராசு (எ) குறிஞ்சிவேலன், 2004-இல் விருது பெற்ற ப.பாஸ்கரன் (எ) பாவண்ணன், 2010-இல் விருது பெற்ற சா. மணி (எ) நிா்மாலயா, 2011-இல் விருது பெற்ற பி.க.இராஜேந்திரன் (எ) இந்திரன், 2015-இல் விருது பெற்ற கௌரி கிருபானந்தன், 2016-இல் விருது பெற்ற க. பூரணச்சந்திரன், 2017-இல் தி. மாரிமுத்து (எ) யூமா வாசுகி, 2018-இல் விருது பெற்ற சா.முகம்மது யூசுப், 2019-இல் விருது பெற்ற கே.வி.ஜெயஸ்ரீ, 2023-இல் விருது பெற்ற கண்ணையன் தட்சணமூா்த்தி ஆகியோருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலா் நா. முருகானந்தம், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் வே.ராஜாராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.