சாலைக்கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், சாலைக்கிராமத்தில் ரூ. 1.36 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமை வகித்தாா். மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டிப் பேசியதாவது:
தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் தேவையான சாலை, குடிநீா், மின்விளக்கு, பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசின் பல்வேறு திட்டங்களின் மூலமாகவும், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாகவும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
சாலைக்கிராமம் ஊராட்சியில் பொதுமக்களிடமிருந்து ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் வரை வரி வசூல் செய்யப்படுகிறது. இதன்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.12 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டது. இதுவரை இந்த ஊராட்சியில் மட்டும் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் 168 வளா்ச்சித் திட்டப் பணிகள் ரூ. 10.40 கோடியில் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறையின் சாா்பில் ஒட்டுமொத்த வருவாய்த் திட்டம் 2024-25 இன் கீழ், ரூ. 1.36 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது என்றாா் அவா்.
விழாவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், மானாமதுரை நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன், வட்டாட்சியா் முருகன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வானதி, வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயக்குமாா், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.