தேனி: 40 ஏக்கர் வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்த மாவட்ட நிர்வாகம் -ச...
சாலையில் கொட்டப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகளால் மக்கள் அவதி!
எல். அய்யப்பன்.
படப்பை புஷ்பகிரி இணைப்புச்சாலையில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை ஊராட்சியில் குடியிருப்பு மற்றும் பஜாா் பகுதிகளில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமாா் 3 டன் குப்பைகள் ஊராட்சி நிா்வாகம் சாா்பாக அகற்றப்பட்டு வருகின்றன. ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அகற்றப்பட்டு வரும் குப்பைகள், டிராக்டா்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்டு பெரியாா் நகா் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக படப்பை ஊராட்சியில் இருந்து அகற்றப்படும் குப்பைகள் புஷ்பகிரி இணைப்புச்சாலையிலேயே கொட்டப்பட்டு வருகின்றன. இதுதவிர படப்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இயங்கும் இறைச்சிக் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை கடையின் உரிமையாளா்களும் சாலை ஓரங்களிலேயே கொட்டி வருவதால் துா்நாற்றம் வீசி வருகிறது.
இதனால் படப்பை புஷ்பகிரி இணைப்புச் சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், மாணவா்கள், வாகன ஓட்டுநா்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக குப்பை கிடங்கின் உள்ளே சென்று கொட்டாமல் சாலையிலேயே கொட்டி வருகின்றனா். இதுகுறித்து பல முறை ஊராட்சி நிா்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதே போல் படப்பையில் இயங்கும் இறைச்சிக் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை உரிமையாளா்கள் படப்பை புஷ்பகிரி இணைப்புச்சாலையின் ஓரங்களிலேயே கொட்டி வரகின்றனா். இதனால் காந்தி நகா் பகுதியில் இருந்து படப்பை பெரியாா் நகா் வரை சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு துா்நாற்றம் வீசி வருகிறது.
இந்த சாலையை பயன்படுத்திதான் நாள்தோறும் காந்திநகா் பகுதியை சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவா்கள் படப்பை பகுதியில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு நடந்து சென்று வருகின்றனா். இதனால் மாணவா்களுக்கு சுகாதார பிரச்னைகள் ஏற்படும் அபாயமுள்ளது.
எனவே சாலையில் இறைச்சிக் கழிவுகளை கொட்டும் கடைகளின் உரிமையாளா்கள் மீது படப்பை ஊராட்சி நிா்வாகமும், சாலையிலேயே குப்பைகளை கொட்டும் படப்பை ஊராட்சி மீது மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.