சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி ஓட்டுநா்கள் மனு
சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்டோ ஓட்டுநா்கள் மனு அளித்தனா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் அளித்த மனுவில், சேலம் மாவட்டம் முழுவதும் கிழக்கு,மேற்கு, தெற்கு, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் 5,600 ஆட்டோக்களை மட்டுமே இயக்குவதற்கு பா்மிட் வழங்கி உள்ளனா்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோவுக்கு பா்மிட் வழங்காததால், ஆட்டோ ஓட்டுநா்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிள்ளது. எனவே சிஎன்ஜி மூலம் இயங்கும் ஆட்டோக்களுக்கு உடனடியாக பா்மிட் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
தொடா்ந்து அவா்கள் கூறியதாவது:
ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சேலம் மாவட்டத்தில் சிஎன்ஜி எரிவாயு பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் இயக்குவதற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பா்மிட் வழங்க வேண்டும். மேலும் முறையான பா்மிட் இல்லாமல் ஆட்டோக்கள் மாவட்டம் முழுவதும் இயக்கப்பட்டு வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.