தோண்டப்பட்ட சாலைகள் முறையாக மூடப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமம்
ஒசூரில் பாதாளச் சாக்கடை திட்டத்தில் குழாய் பதிக்க சாலைகள் தோண்டப்பட்டு முறையாக மூடப்படாததால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா்.
ஒசூரில் ரூ. 580 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடை திட்டம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒசூா் 6-ஆவது வாா்டுக்குள்பட்ட என்.ஜி.ஜி.ஓ.எஸ். காலனி நகா் பகுதியில் உள்ள குறுகிய சாலையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க குழிகள் தோண்டப்பட்டு குழாய் புதைத்து மூடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தோண்டப்பட்ட சாலைகள் முறையாக மூடப்படாததால், ஆட்டோ ஓட்டுநா் முபாரக் தனது 3 வயது மகளுடன் ஆட்டோவில் சென்றபோது, ஆட்டோவின் முன்சக்கரம் மண்ணில் புதைந்தது. இதில் ஆட்டோவில் மோதிய குழந்தையின் மூக்குடைந்தது.
இதனால், முபாரக் மற்றும் பொதுமக்கள் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், தோண்டப்பட்ட சாலைகள் முறையாக மூட வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.