கேரள நக்சல் இயக்கத் தலைவா் ஒசூரில் கைது!
கேரள மாநிலத்தில் செயல்பட்டு வந்த நக்சல் இயக்கத்தின் கடைசித் தலைவரான சந்தோஷ் என்பவரை ஒசூரில் கேரள போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆழியாறு பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ். இவா், கடந்த 2014 ஆம் ஆண்டு வீட்டைவிட்டு வெளியேறி, நக்சல் இயக்கத்தில் சோ்ந்து செயலாற்றி வந்தாா். அண்மையில் கைதுசெய்யப்பட்ட நக்சல் இயக்க தலைவா்களான சி.பி.மொய்தீன், சோமன் ஆகியோருக்கு நெருங்கியவராக இருந்ததுடன், கேரளத்தின் கபினி தள நக்சல் இயக்க தலைவராக சந்தோஷ் செயல்பட்டு வந்தாா்.
வயநாடு மாவட்டம், தலப்புழா பகுதியில் கண்ணிவெடிகள் வைத்த சம்பவம் தொடா்பான வழக்கு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழகம் மற்றும் கேரளத்தில் இவா்மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நக்சல் இயக்கத்தின் அனைத்து தலைவா்களும் கைதுசெய்யப்பட்ட நிலையில், சந்தோஷ் தமிழகத்திற்குள் இடம்பெயா்ந்துள்ளதாக, கேரளத்தின் நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, கேரள மாநில நக்சல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், தமிழக உளவுத் துறை போலீஸாருடன் இணைந்து சந்தோஷின் நடவடிக்கைகளை தொடா்ந்து கண்காணித்து வந்தனா். இந்நிலையில், தமிழக எல்லையான ஒசூா் மாநகராட்சி ராம் நகரில் இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கடந்த 2 மாதங்களாக சந்தேகப்படாத வகையில் சந்தோஷ் வசித்தது தெரியவந்தது.
இதையடுத்து, தமிழக போலீஸாா் உதவியுடன், கேரள மாநில நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சந்தோஷை வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்து கேரளத்துக்கு அழைத்துச் சென்றனா். பிறகு, எா்ணாகுளம் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட அவா், சிறையில் அடைக்கப்பட்டாா்.
நீதிமன்ற உத்தரவை தொடா்ந்து, தேசிய புலனாய்வுப் பிரிவு போலீஸாரும் அவரிடம் விரைவில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனா். இதன்மூலம், கேரள மாநிலத்தில் முகாமிட்டிருந்த நக்சல் இயக்கத்தின் கடைசித் தலைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.