சாலைத் தடுப்பை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட் மறியல்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை முக்கிய சாலையில் தடுப்பு அமைத்து மூடியதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தடுப்புகள் அகற்றப்பட்டன.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் தொழிற்பேட்டை சாலையை அப்பகுதி மக்கள் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனா். இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோா் வேலைக்கும், பள்ளி, கல்லூரி உள்ளிட்டவற்றுக்கும் சென்று வருகின்றனா்.
இந்தப் பகுதியில் அரசு அச்சகம், குடிமைப்பொருள் வழங்கல் துறை, கலால் துறை, வேளாண் துறை அலுவலகங்கள், கூட்டுறவு அரிசி ஆலை, பாசிக், பாப்ஸ்கோ, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், மின் துறை அலுவலகம் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன.
தொழிற்பேட்டை முக்கிய சாலையை காவல் துறை சில நாள்களுக்கு முன்பு இரும்புத் தடுப்புகளால் மூடியதால் மக்கள் சிமத்துக்குள்ளாகினா்.
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் சாலையை அடைத்துள்ள இரும்புத் தடுப்புகளை அகற்றக் கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலா் கே.சேதுசெல்வம், தொகுதிச் செயலா் தென்னரசன், மாநிலக் குழு உறுப்பினா்கள் முருகன், எழிலன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
போராட்டத்தை அடுத்து, சாலைத் தடுப்புகளை போக்குவரத்து போலீஸாா் அகற்றினா். பின்னா், மறியலும் கைவிடப்பட்டது.