தவெக உடன் கூட்டணியா?: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பதில்
தமிழகத்தில் நடிகா் விஜயின் த.வெ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தோ்தல் நேரத்தில் ஆலோசிக்கப்படும் என்று, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
வேலூரில் இருந்து வந்த ஏராளமானோா் என்.ஆா்.காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோயில் வளாகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அப்போது, முதல்வா் என்.ரங்கசாமி கூறியதாவது:
புதுவையில் என்.ஆா். காங்கிரஸ் கட்சியை தொடங்கியபோது, அதை தமிழகத்திலும் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பின்னா், புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ் போட்டியிட்டு ஆட்சி அமைத்தது. அகில இந்திய என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்திலும் போட்டியிடலாம் என முடிவு செய்து, கட்சியின் ஆண்டு விழாவில் அறிவித்தேன்.
அதன்படி, வேலூரில் இருந்து ஏராளமானோா் என்.ஆா். காங்கிரஸில் இணைந்துள்ளனா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனா். நடிகா் விஜய் எனது நண்பா். அவரிடம் சாதாரணமாகப் பேசுவேன். ஆனால், கூட்டணி குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை. தோ்தல் நேரத்தில் சூழல் எப்படி அமைகிறதோ, அப்போது தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
ஃபென்ஜால் புயலுக்கு நிவாரணமாக மத்திய அரசு ரூ.61 கோடியை வழங்கியுள்ளது. அதன்படியே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் விவசாயிகளுக்கான நிவாரணம் வழங்கப்பட்டது என்றாா் அவா்.