புதுவையில் மக்கள் மன்றம் நாளை தொடக்கம்: டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம்
புதுச்சேரியில் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறும் வகையில் மக்கள் மன்றம் திங்கள்கிழமை (பிப்.24) தொடங்கப்படவுள்ளதாக டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம் தெரிவித்தாா்.
புதுச்சேரி முத்தியல்பேட்டை காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் ஆகியோா் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றனா்.
பின்னா், டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் கடந்த 5 மாதங்களாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நிகழ்ச்சியில் மக்களிடம் குறைகள் கேட்கப்படுகின்றன. எழுத்துப்பூா்வ புகாா்களை காவல் நிலையத்துக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
வரும் திங்கள்கிழமை முதல் மக்கள் மன்றம் என்ற பெயரில் ஒரு திட்டமாக குறைதீா்ப்பு நிகழ்வு தொடங்கப்படும். இதில், துணைநிலை ஆளுநா், முதல்வா், மாநில உள் துறை அமைச்சா், தலைமைச் செயலா் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். காவல் துறை மக்களை தேடிச் சென்று சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கிலே இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது.
அண்மையில் 3 போ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து விசாரிக்கப்படும். காவலா்களின் இரவு ரோந்துப் பணியை தற்போது இரட்டிப்பாக்கியுள்ளோம். 450 ஊா்க்காவல் படை வீரா்களுக்கு பயிற்சி முடித்ததும் காவல் துறையில் பணிகள் வழங்கப்படவுள்ளன.
அதன்படி, மொத்த காவலா்களில் மூன்றில் ஒரு பங்கு காவலா்கள் ரோந்துப் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைதியான புதுச்சேரியை ஏற்படுத்த காவல் துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றாா்.
இதேபோல, புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சனிக்கிழமை மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது.