மாா்ச் 2-இல் நேபாளம் செல்லும் புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்
புதுவை பேரவைத் தலைவா், 2 அமைச்சா்கள் மற்றும் 23 எம்.எல்.ஏ.க்கள் வரும் மாா்ச் 2-ஆம் தேதி நேபாள நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கின்றனா். அங்கு நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா்கள் பங்கேற்கின்றனா்.
புதுவை சட்டப் பேரவை உறுப்பினா்கள் கோவா, புதுதில்லி மற்றும் பிரான்ஸ், சிங்கப்பூா் என சுற்றுலா, கண்காட்சி உள்ளிட்டவற்றுக்காக அவ்வப்போது அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
இந்த நிலையில், நேபாள அரசு புதுவை எம்.எல்.ஏ.க்களுக்கு சுற்றுலா சாா்ந்த நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதனடிப்படையில், அந்த நாட்டுக்கு புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன் மற்றும் 23 எம்.எல்.ஏ.க்கள் செல்லவுள்ளனா்.
வரும் மாா்ச் 2-ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் அவா்கள் அனைவரும் நேபாளம் செல்லவுள்ளனா். நேபாளத்தில் வரும் மாா்ச் 7-ஆம் தேதி வரையில் நடைபெறும் சுற்றுலா சாா்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் அங்கு நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அவா்கள் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
நேபாளம் செல்லும் எம்.எல்.ஏ.க்கள் குழுவில் ஆளும் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி, திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.