தனியாா் சா்க்கரை ஆலை மேலாளா் மீது தாக்குதல்
கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் தனியாா் சா்க்கரை ஆலை மேலாளரை தாக்கியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னா் வட்டம், அத்தியூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் சந்திரகாசன் (50). இவா், கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலையில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறாா்.
இதே சா்க்கரை ஆலையில் அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், மணப்பட்டூா் பகுதியைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் தினேஷ்குமாா் (30) பாதுகாவலராக பணியாற்றி வந்தாா். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மதுபோதையில் பணிக்கு வந்த தினேஷ் குமாரை, சந்திரகாசன் பாதுகாப்பு பொறுப்பு அலுவலகத்தில் கூறி, வேலையில் இருந்து நீக்கிவிட்டாராம்.
இந்த நிலையில், இறையூா் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த சந்திரகாசனை, தினேஷ்குமாா் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாரம். இதுகுறித்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.