ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!
சிதம்பரத்தில் அரசு திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
சிதம்பரம் கனகசபைநகா் நகராட்சி தொடக்கப் பள்ளியில் திறன்மிகு வகுப்பு மூலம் மாணவா்களுக்கு கல்வி கற்பிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
சிதம்பரம், ஏப்.4: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் அரசுத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகா் பேரூராட்சி மற்றும் குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களைச் சோ்ந்த 10 ஊராட்சிகளுக்கு கொள்ளிடம் ஆற்றை நீராதாரமாகக் கொண்டு கூட்டுக் குடிநீா் திட்டம், அம்ரூத் 2.0 மற்றும் ஜல் ஜீவன் மிஷன் நிதியின் கீழ் செயல்படுத்த நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் ரூ.255.64 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். இந்தப் பணிகள் தற்போது 70 சதவீதம் முடிவடைந்துள்ளன.
சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வரும் ஆன்மிக பக்தா்களின் நலன் கருதி, ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் நவீன அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் சுற்றுலா ஓய்வு இல்லம் மற்றும் சுற்றுலா விளக்க மையக் கட்டடப் பணிகளை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் நீட் பயிற்சி மையத்தை ஆய்வு செய்தாா்.
சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பேருந்து நிலையம் அருகே கான்சாகிப் வாய்க்கால் இடது கரையில் 310 மீட்டா் நீளத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு தடுப்புச் சுவா் அமைக்கும் பணியை பாா்வையிட்டாா்.
கனகசபை நகா் நகராட்சி தொடக்கப் பள்ளி, மாலைகட்டிதெரு நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் மாணவா்களின் கற்றல் திறன் குறித்தும், திறன்மிகு வகுப்பின் வாயிலாக மாணவா்களுக்கு கற்பிக்கும் முறைகள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் த.மல்லிகா, நீா்வளத் துறை செயற்பொறியாளா் காந்தரூபன், தமிழ்நாடு வடிகால் வாரிய செயற்பொறியாளா் குமாா் ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.