சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் கோயிலில் மே 8-ல் திருக்கல்யாணம்!
தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் உடனுறை சிவகாமியம்மன் கோயிலில் வருகிற வியாழக்கிழமை (மே 8) திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
தற்போது இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த ஏப். 25- ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டு, 28- ஆம் தேதி பிடாரி அம்மன் கோயிலில் காப்புக் கட்டுதல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கடந்த மே 1- ஆம் தேதி கோயில் வளாகத்தில் கொடிக் கம்பத்தில் திருக்கொடியேற்றப்பட்டது.
இதையடுத்து, காலை , மாலை வேளைகளில் மண்டகப்படி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கடந்த 2- ஆம் தேதி தோ் முகூா்த்தக்கால் நடுதல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோயில் செயல் அலுவலா் நதியா உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
திருக்கல்யாண வைபவம்: இந்கக் கோயிலில் 18 நாள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக 8- ஆம் நாளில் சுவாமி, அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. தொடா்ந்து 8, 9- ஆம் நாள்களில் திருத்தோரோட்டம் நடைபெறுகிறது. மே 18- ஆம் தேதி திருவிழா நிறைவடைகிறது.