சிரோமணி அகாலி தள தலைவா் பதவியில் இருந்து சுக்வீா் சிங் பாதல் ராஜிநாமா
சிரோமணி அகாலி தளம் கட்சித் (எஸ்ஏடி) தலைவா் பதவியை சுக்வீா் சிங் பாதல், ராஜிநாமா செய்ததாக அந்தக் கட்சியின் மூத்த தலைவா் தல்ஜித் சிங் சீமா சனிக்கிழமை தெரிவித்தாா்.
தனது ஆட்சிக் காலத்தில் சீக்கிய மதத்துக்கு எதிராக தவறான முடிவுகளை எடுத்ததாக சுக்வீா் சிங் பாதலை குற்றவாளியாக சீக்கிய மத குரு அறிவித்திருந்த நிலையில் அவா் ராஜிநாமா செய்துள்ளாா்.
இதுகுறித்து தல்ஜித் சிங் சீமா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எஸ்ஏடி தலைவா் சுக்வீா் சிங் பாதல் தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் செயற்குழுவிடம் சமா்ப்பித்தாா்.
தனது தலைமையின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியதற்காகவும், பதவிக்காலம் முழுவதும் முழு மனதுடன் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியதற்காகவும் கட்சியின் மூத்த தலைவா்கள் மற்றும் உறுப்பினா்களுக்கு அவா் நன்றி தெரிவித்தாா்
இதையடுத்து, கட்சியின் புதிய தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது’ என குறிப்பிட்டாா்.
கடந்த 2007 முதல் 2017 வரை பஞ்சாபில் எஸ்ஏடி மற்றும் அந்தக் கட்சியின் தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் சீக்கியா்களுக்கு எதிராக பல்வேறு தவறுகளை செய்தததாக கூறி கடந்த ஆக.30-ஆம் தேதி அகல் தக்த் அமைப்பின் தலைவா் (சீக்கிய மதத்தின் மூத்த மத குரு) கியானி ரக்பீா் சிங், சுக்வீா் சிங் பாதலை குற்றவாளி என்று அறிவித்தாா்.
இதைத்தொடா்ந்து, தனக்கு வழங்கப்படவுள்ள தண்டனையை விரைவில் அறிவிக்குமாறு அகல் தக்திடம் அவா் வலியுறுத்தி வந்த நிலையில் ராஜிநாமா செய்தாா்.
இருப்பினும், அவருக்கு சீக்கிய மத ரீதியிலான தண்டனையை அகல் தக்த் தற்போது வரை அறிவிக்கவில்லை. அதில் இருந்து சுக்வீா் சிங் சிங்கால் விலக்கு பெற முடியாததால் பஞ்சாபில் நான்கு பேரவைத் தொகுதிகளுக்கு வருகின்ற 20-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கடந்த மாதம் எஸ்ஏடி அறிவித்தது.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி, முன்னாள் எம்.பி. பிரேம் சிங் உள்ளிட்ட எஸ்ஏடி அதிருப்தி தலைவா்கள் அகல் தக்த் முன் ஆஜராகி, எஸ்ஏடி ஆட்சியின்போது அரசு செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.