செய்திகள் :

சிறிய பறவை; கோவக்கார பறவை; ஒருவேளைக்கு 100 பூச்சிகளையாவது உண்ணும் பறவை - ஆச்சர்ய தகவல்கள்

post image

''ஓர் அதிகாலை நேரம். எனக்கு மிகவும் பிடித்த குருவிகளில் ஒன்றை பார்ப்பதற்கும் அது இரையெடுக்கும் வேகத்தை ரசிப்பதற்கும் வரப்பு ஓரம் உட்கார்ந்துகொண்டிருந்தேன். காதுகளுக்குள் கீச் கீச் என்று நுழையாமல், கீசு கீசு என காதுகளை மென்மையாக வருடிக்கொடுக்கும் ஒலியுடன் அந்தக் குருவிகள் வயலுக்குள் நுழைந்தன.

நுழைந்த வேகத்தில் பூச்சிகளைப் பிடித்தன; பிடித்த பூச்சியுடன் பயிரின்மீது உட்கார்ந்தன; அந்தப்பூச்சியை விழுங்கின. மறுபடியும் வேகமாக பூச்சியை பிடிக்கப் பறந்தன. 'ஆஹா... என்ன்னன... வேகம்' என அந்தக் குருவிகளை கண்கொட்டாமல் ரசித்துக்கொண்டே இருந்தேன்.'' - இயற்கை ஆய்வாளர், ஆர்வலர் மற்றும் எழுத்தாளருமான கோவை சதாசிவம் சிலிர்ப்புடன் விவரிக்கிற அந்தக் குருவி எது தெரியுமா?

கரிச்சான்
கரிச்சான்

ஆடும், மாடும் மேய்ந்துகொண்டிருக்கையில் அவற்றின் மேல் ஒய்யாரமாக உட்கார்ந்துக்கொண்டிருக்கிற கன்னங்கரிய குருவிகளைப் பார்த்திருக்கிறீர்களா..? தோட்டம் இருக்கிற வீடுகளில், சின்னஞ்சிறு கிளைகளில் உட்கார்ந்தபடி ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். சிட்டுக்குருவியைவிட சற்று பெரிதாக இருக்கிற இந்தக் குருவிக்குத்தான் எத்தனையெத்தனை பெயர்கள்..? கருங்குருவி, கரிக்குருவி, கரிச்சான், கருவாட்டு வாலி, மாட்டுக்காரக் குருவி, நீண்டவால் குருவி, ஆனை சாத்தான் என ஊருக்கு ஒரு பெயரிட்டு இதை அழைக்கிறார்கள். ஆனால், இந்த ஒரு பெயரைச் சொன்னால் எல்லோரும் 'அட, அந்தப்பறவையா' என்பீர்கள். அந்தப்பெயர் 'இரட்டைவால் குருவி.' கரிச்சானின் நீண்ட வால் அதன் இறுதியில் இரண்டாகப் பிரிந்து காணப்படும். அதனால்தான் இந்தப் பெயர். இரட்டைவால் குருவியைப்பற்றி கோவை சதாசிவம் சொல்கிற தகவல்கள் எல்லாம், கேட்பதற்கு நிறைய ஆச்சரியமும் கொஞ்சம் வருத்தமுமாக இருக்கிறது. இனி அவருடைய வார்த்தைகளில்...

''கரிச்சான் குருவிகள் வரகு, திணை, நெல், தானியங்கள் என உணவுப்பயிர்கள் விளைகிற எல்லா விளை நிலங்களிலும் இருக்கும். 'அப்படின்னா இது பயிர்களை நாசம் செஞ்சிடுமோ' என்கிற அச்சம் தேவையில்லை. கரிச்சான்கள் பயிர்களை நாசம் செய்கிற பூச்சிகளைத்தான் நாசம் செய்யும். அதுவும் வேக வேகமாக... கரிச்சான்கள் இரையெடுக்கும் வேகத்தைப் பார்க்க வேண்டுமென்றால், நாம் விடியற்காலை 5 மணிவாக்கில் வயல்வெளிக்கு சென்றுவிட வேண்டும். கரிச்சான்கள் அதிகாலை மூன்றரை மணிக்கே விழித்துவிடும். அந்த நேரத்தில் கீசு கீசு என ஒலிக்கிற அவற்றின் குரலைக் கேட்பதே ஒரு பேரானந்த அனுபவம். பூச்சிகள் இரை தேட பயிர் பச்சை நிறைந்த வயல்வெளிகளுக்குள் அதிகாலையில் நுழையும்போதே, கரிச்சான்கள் 'வி ஆர் இன் த டியூட்டி' என அவற்றைப்பிடிக்கத் தயாராக இருக்கும்.

கரிச்சான்
கரிச்சான்

ஒவ்வொரு கரிச்சானும் குறைந்தது நூறு பூச்சிகளையாவது விழுங்கும். சிட்டுக்குருவியைவிட சற்றே பெரிதாக இருக்கிற கரிச்சான்களில் வயிறை கற்பனை செய்துபாருங்கள். அவற்றால், அத்தனைப் பூச்சிகளையும் செரிக்க முடியுமா என்ன..? விழுங்கிய பூச்சிகளையெல்லாம் இரைப்பைக்குள் உருட்டி உருட்டி கக்கி விடும். உயிரிழந்த அந்தப் பூச்சிகள் எறும்புகளுக்கு உணவாகி விடும். இரண்டு ஏக்கர் வயல்வெளியில் பத்து கரிச்சான்கள் இருந்தால், அவை காலையும் மாலையும் குறைந்தது நூறு பூச்சிகளை விழுங்கினால், பூச்சிக்கொல்லி மருந்தே தேவைப்படாது.

கரிச்சான் ஒரு கோவக்கார பறவை. எந்தளவுக்கு என்றால், தன் குஞ்சை தூக்கிக்கொண்டு செல்லும் ஊர்ப்பருந்தையே மூர்க்கமாக வானத்தில் விரட்டுகிற அளவுக்கு... தன்னுடைய இரையை வேறொரு பறவை களவாடினால், அதன் கதையை முடிக்கிற அளவுக்கு அறச்சீற்றம் கொண்ட குருவி இது. இந்தக் காரணத்தால் கரிச்சான் கூட்டின் அருகே கூடு கட்ட காக்கை பயப்படும். இவ்வளவு ஏன், கரிச்சான்கள் மாட்டின் மீது அமர்ந்திருந்தால், மாட்டின் மேல் இருக்கிற புண்ணைக் கொத்துவதற்குகூட காக்கை அஞ்சும். புறா, தவிட்டுக்குருவி போல சில பயந்த சுபாவம் கொண்ட பறவைகள், தங்கள் பாதுகாப்புக்காக கரிச்சானின் கூட்டுக்கு அருகே தங்கள் கூடுகளைக் கட்டிக்கொள்ளும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Black Drongo
Black Drongo

கரிச்சானின் இந்த தைரியத்தைப் பாராட்டி இதற்கு ஆனைச்சாத்தான் என்கிற பெயரும் இருக்கிறது. அதாவது, பறவைகளில் யானை போன்ற பலசாலிகளையும் எதிர்க்கும் தைரியம் கொண்ட பறவை என இதற்கு அர்த்தம். கரிச்சான் என்கிற ஆனை சாத்தானைப்பற்றி ஆண்டாள் தன்னுடைய பாசுரத்தில் பாடியிருக்கிறார். ஆண்டாள் தன் தோழிகளை துயிலெழுப்ப, 'கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ' என்று ஆரம்பிக்கிறாள் தன் பாசுரத்தில். திருப்பாவை காலத்தில் இருந்து இக்காலம் வரைக்கும் கரிச்சானின் உயிர்க்கடிகாரம் அதிகாலை மூன்றரை மணிக்கே அதை எழுப்பி விட்டுவிடுகிறது.

உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா? பூவுலகில் பூச்சிகள்தான் அதிகம். எவ்வளவு வீர்யமான மருந்துகளை அடித்தாலும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தத்தான் முடியும். ஒழிக்க முடியாது. பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் முதலிடத்தில் இருப்பது கரிச்சான் குருவிகள்தான். ஆனால், கரிச்சானின் நிலைமை இன்றைக்கு எப்படியிருக்கிறது தெரியுமா? நம் வீட்டு வேலிகளில்கூட அதிகமாகப் பார்க்க முடிந்த கரிச்சான்களை இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் பார்க்க முடிகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகள் பூச்சிகளைக் கொன்றதோடு, அதையே இரையாகக்கொண்ட கரிச்சான்களின் எண்ணிக்கையையும் குறைத்துவிட்டது. பூச்சிகள் குறைய குறைய பூச்சிக்கொல்லிகளால் இறந்த பூச்சிகளையும் உண்ண ஆரம்பித்தன கரிச்சான்கள்.

கோவை சதாசிவம்
கோவை சதாசிவம்

எந்தெந்த பூச்சிக்கொல்லிகள் எந்தெந்த பூச்சிகளைக்கொல்லும் என்று நம்மிடம் ஒரு பட்டியல் இருப்பதுபோல, எந்தெந்த பறவைகள் பூச்சிகளை உண்ணும் என்கிற பட்டியலும் நம்மிடம் இருந்தால், கரிச்சான்கள் பிழைத்திருக்கும். ஓர் ஏக்கருக்கு பத்து கரிச்சான்களாவது இருந்தால், நம் அடுத்த தலைமுறை நஞ்சில்லா உணவை உண்ணும் என்பது என் நம்பிக்கை'' என்று முடிக்கிறார் கோவை சதாசிவம்.

நீலகிரியில் 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் யானை; நெல்லை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் விடுவிப்பு!

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட கிளன்வன்ஸ், திருவள்ளுவர் நகர், சுபாஷ் நகர், ஆரூற்றுப்பாறை, பாரதி நகர், டெல் ஹவுஸ், கெல்லி, குயின்ட் உள்ளிட்ட விவசாய பகுதி, மக்கள் குடி... மேலும் பார்க்க

நீலகிரி: ஒரு மாத சிறை; 600 கிமீ தூரம்; காடு திரும்பிய யானை ராதாகிருஷ்ணன்; வனத்துறை சொல்வது என்ன?

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் அவற்றின் வாழிடங்களும் வழித்தடங்களும் கடுமையான சிதைவுக்கு உள்ளாகி வருகின்றன.இதனால் தடம் மாறும் யானைகள், மன... மேலும் பார்க்க

காட்டுப்பன்றிகளை விரட்ட கொதிக்கும் வெந்நீர், இரக்கமற்ற செயலால் கொந்தளிப்பில் ஆர்வலர்கள்

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் கழிவு மேலாண்மை திட்டங்களை முறைப்படுத்தவில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது. குடியிருப்புப் பகுதிகள் வணிக வளாகங்கள், மக்கள் கூடும் இடங்களில் உண... மேலும் பார்க்க

Iceland: கொசுக்கள் இல்லாத நாட்டில் முதன்முறையாக கண்டறியப்பட்ட 3 கொசுகள் - என்ன காரணம்?

ஐஸ்லாந்தில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக முதல் முறையாக கொசுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நாடு, உலகில் கொசுக்கள் இல்லாத குளிர் பிரதேசங்களில் ஒன்றாக இருந்த நிலையில், தற்போது முதல் முறைய... மேலும் பார்க்க

சென்னை: பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கும் நுரை | Photo Album

Rain Updates: 'இந்த வாரம் முழுதும் மழை' - வடகிழக்கு பருவமழை தீவிரம்; எந்தெந்த மாவட்டங்களுக்கு Alert? மேலும் பார்க்க