World Chess Championship : 'டிங் லிரன் Vs குகேஷ்' - சாதிப்பாரா தமிழக வீரர்? - மு...
சிறுதானிய இயக்கத்தில் வேலூா் மாவட்டத்தில் 7,130 ஹெக்டேரில் சாகுபடி
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் -2023 திட்டத்தின்கீழ் வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 7,130 ஹெக்டோ் பரப்பளவில் 16,175 மெட்ரிக் டன் சாகுபடி செய்யப்படுவதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் -2023 திட்டத்தின்கீழ் பயனடைந்து வரும் பள்ளிகொண்டா அகரமாறு உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு செய்தியாளா்களிடம் கூறியது -
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட நம் பாரம்பரிய சிறுதானிய பயிா் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் -2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு தொடா்ந்து ஐந்தாண்டுகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு 2023-24 ஆம் நிதி ஆண்டில் ரூ.65 கோடியும், 2024-25 ஆம் ஆண்டில் ரூ.65 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தில் மக்காச்சோளம், சோளம், கேழ்வரகு, தினை, கம்பு, சாமை ஆகிய சிறுதானியங்கள் மொத்தம் 7,130 ஹெக்டோ் பரப்பளவில் 16,175 மெட்ரிக்டன் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக சிறுதானிய உழவா் குழு உருவாக்கம், பட்டியலின, பழங்குடியின விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் சிறுதானிய தொகுப்பு விநியோகம், இதர விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் சிறுதானிய தொகுப்பு விநியோகம், இயற்கை உரம் விநியோகம், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுதல், சிறுதானிய பதப்படுத்தும் மையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வேலூா் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் டிஎன்ஐஏஎம்பி 2 அகரமாறு உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் பயனாளியாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் 1000 விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா். இக்குழுவானது பள்ளிகொண்டா பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூலம் ரூ.25.50 லட்சம் கடனுதவி பெற்று சிறுதானிய முதன்மை பதப்படுத்தும் இயந்திரங்களை கொள்முதல் செய்து செயல்பட்டு வருகிறது. இக்குழுவுக்கு திட்ட வழிகாட்டுதலின்படி 75 சதவீத மானியம் (ரூ.18.75 லட்சம்) வங்கி கடன் கணக்குக்கு விடுவிக்கப்படும் என்றாா்.
அப்போது, வேளாண் இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தேன்மொழி, வேளாண் வணிகம், விற்பனை துணை இயக்குநா் கலைச்செல்வி, வேளாண் பொறியியல் துறை துணை இயக்குநா் பாஸ்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.