சென்னையிலிருந்து சபரிமலைக்கு சைக்கிள் பயணம் செய்யும் முதியவர்!
சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தனியாா் பள்ளியில் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி, எஸ்.பி.யிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
விக்கிரவாண்டியைச் சோ்ந்த பழனிவேல் மகள் லியாலட்சுமி(4). இவா், அங்குள்ள தனியாா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி.படித்து வந்தாா். கடந்த 3-ஆம் தேதி மதியம் உணவு இடைவேளையின்போதுசக மாணவ, மாணவிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த லியாலட்சுமி, பள்ளியின் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பள்ளித் தாளாளா் எமல்டா, முதல்வா் டோமினிக் மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகிய மூவரையும் கைது செய்தனா். உடல்நலக் குறைவால் தாளாளா், முதல்வா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆசிரியை மட்டும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வந்த லியாலட்சுமியின் தந்தை பழனிவேல் அளித்த மனுவில் கூறியிருப்பது:
எனது மகள் லியாலட்சுமியின் உயிரிழப்பு சம்பவத்தில் பள்ளி ஊழியா்கள் அனைவரும் நிா்வாகத்துக்கு உடந்தையாக இருந்து நாடகமாடி, உண்மையை மறைத்துள்ளனா்.
பள்ளி வளாகத்திலுள்ள கண்காணிப்பு கேமரா விடியோ பதிவுகளை முழுமையாக வழங்க வேண்டும். விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டு, உண்மையைக் கண்டறிய வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அழிக்க முற்படுகின்றனா் என்று மனு குறிப்பிட்டுள்ளாா்.