சிவகங்கை மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல்
சிவகங்கை மாவட்டத்தில் நிகழ் மாதத்தில் இதுவரை வரை 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால், கொசு உற்பத்தியைத் தடுக்கவும், தண்ணீரால் பரவக்கூடிய தொற்று நோய்களைத் தடுப்பதற்கும் சுகாதாரத் துறை, கிராம ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி அமைப்புகளுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் சளியுடன் கூடிய காய்ச்சல் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஒவ்வொரு வட்டாரத்திலும் தினந்தோறும் மூன்று இடங்கள், நகராட்சிக்குள்பட்ட பகுதியில் ஒா் இடம் என்ற விகிதத்தில் 38 சிறப்பு சுகாதார மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை 1,199 இடங்களில் நடைபெற்ற மருத்துவ முகாம்கள் மூலமாக 45,492 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சளியுடன் கூடிய காய்ச்சல் நோயாளிகள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் இதுவரை 285 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகள், பாதிக்கப்பட்ட நபா்கள் வசிக்கும் பகுதி, பணிபுரியும் பகுதிகள், பள்ளி வளாகங்களில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளான கொசுப்புழு ஒழிப்புப் பணிகள், புகை மருந்து தெளித்தல், மருத்துவ முகாம், ஒட்டுமொத்த துப்புரவுப் பணிகள், நிலவேம்பு குடிநீா் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, காய்ச்சல் பாதிப்பு உள்ளவா்கள் சுய மருத்துவம் செய்யாமல், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அரசு வழிகாட்டுதலின்படி கை கழுவுதல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதைக் கடைப்பிடித்தல், கூட்ட நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிா்த்தல் போன்ற நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.