சிவகாசியில் கடையடைப்பு போராட்டம்
விருதுநகா் மாவட்டம், சிவகாசி, திருத்தங்கலில் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
வணிகப் பயன்பாட்டு கட்டடங்களுக்கு வாடகையில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவதைக் கண்டித்தும், இது தொடா்பான ஜி.எஸ்.டி. கவுன்சில் தீா்மானத்தை முழுமையாக நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால், சிவகாசி, திருத்தங்கலில் உள்ள ஜவுளிக் கடைகள், சிற்றுண்டி கடைகள், பெட்டிக் கடைகள், மாநகராட்சி தினசரி காய்கனி சந்தை உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
பெட்ரோல் நிரப்பும் மையங்கள், மருந்துக் கடைகள், பூக்கடைகள் உள்ளிட்டவை மட்டும் திறந்திருந்தன. இந்தக் கடையடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.