சிவகாசி: ஜாமீனில் வந்தவர் வீட்டிற்குள் புகுந்து வெட்டி கொலை; பழிக்குப்பழி சம்பவத்தில் 3 பேர் கைது
சிவகாசி அருகே பழிக்குப்பழியாக வீடு புகுந்து கூலித் தொழிலாளியை மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.
அப்போது நம்மிடம் பேசியவர்கள், "ஆலாவூரணியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27), கூலி தொழிலாளி. கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சுரேஷ் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இதைத்தொடர்ந்து, சிவகாசி - விளாம்பட்டி சாலையில் உள்ள முனீஸ் நகரில் வசித்து வந்தார். நள்ளிரவில் இவரின் வீட்டில் வீட்டுக்குள் புகுந்த மர்மகும்பல் சுரேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், போலீஸூக்கு தகவல் சொல்லவும் தகவலறிந்து விரைந்த வந்த போலீஸார் சுரேஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பான புகாரின்பேரில் மாரனேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடினர்.
இந்தநிலையில் திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சேர்ந்த மதன் கோபால்(23), தனசேகரன்(23), சூர்யா பிரகாஷ்(19) மூன்று பேரை சந்தேகத்தின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் உள்பட 4 பேர் சேர்ந்துதான் சுரேஷை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், முன்விரோதம் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சேர்ந்த மதனகோபால் என்பவரை கொலை செய்வதற்காக அவரின் வீட்டுக்குள் சுரேஷ் புகுந்துள்ளார். அப்போது, உஷாராகி, மதனகோபால் தப்பி ஓடிவிட்டதால், அவரின் அண்ணன் குணசேகரனை, சுரேஷ் வெட்டிக்கொலை செய்தார். அந்த கொலைவழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற சுரேஷ் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்தநிலையில், பழிப்பழியாக சுரேஷை கொலை செய்ய திட்டம் தீட்டிய மதனகோபால், தனது நண்பர்களுடன் சேர்ந்து சுரேஷை வீடுபுகுந்து வெட்டிக்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றனர்.