நெல்லை: `என்னை எப்படியும் கொன்னுடுவாங்க'- கொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற எஸ்.ஐ-யின் கண்ணீர் வீடியோ
நெல்லை டவுன், தைக்கா தெருவில் வசித்து வந்தவர் ஜாகிர் உசேன் என்கிற பிஜிலி (60). விருப்ப ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர், டவுன் ஜாமியா தைக்கா தெருவில் உள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்காக பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், ஜாகிர் உசேனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் டவுன் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.
கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேனின் சடத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் கொலை தொடர்பாக டவுன் பகுதியைச் சேர்ந்த அக்பர்ஷா (32), தச்சநல்லூரைச் சேர்ந்த கார்த்திக் (32) ஆகியோர் நெல்லை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

கொலையின் பின்னணி!
இந்தக் கொலை குறித்து ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் எதற்காக கொலை செய்யப்பட்டார் என நெல்லை போலீஸாரிடம் விசாரித்தோம்.
``கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேனுக்கும் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்கிற தௌபிக் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. அந்த முன்விரோதத்தில்தான் ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர்கள் அக்பர்ஷா, கார்த்திக் ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்திருக்கிறார்கள். இந்தக் கொலை தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.
யார் காரணம்?
இதற்கிடையில் ஜாகிர் உசேன் கொலைக்கு காவல்துறையில் உள்ள சில அதிகாரிகளே காரணம் என அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அதுதொடர்பாக ஜாகிர் உசேன் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``தமிழக காவல்துறையில் 1986-ல் காவல் துறையில் பணியில் சேர்ந்தார். இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியவர். எஸ்.ஐ வரை பதவி உயர்வு பெற்ற அவர், கடந்த 2009-ல் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார்.
கொலை செய்யப்பட்ட ஜாகிர்உசேன் மீது கடந்த 4.1.25-ம் தேதி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் துணை கமிஷனர் கீதாவிடம் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் தன்னை சாதியைச் சொல்லி ஜாகிர் உசேன் திட்டியதோடு கொலை மிரட்டலும் விடுக்கிறார் என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் டவுன் போலீஸார் ஜாகிர் உசேன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் பெற்றதால் அவரை போலீஸார் கைது செய்யவில்லை.
இந்தநிலையில் ஜாகிர் உசேனுக்கு வழக்கறிஞர் தரப்பிலிருந்து பலவகையில் மிரட்டல்கள் வந்தன. அதனால்தான் அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பே வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில் இடபிரச்னை குறித்தும் தனக்கு மிரட்டல் வருவதைக் குறித்தும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் போலீஸார் ஒருதலை பட்சமாக நடவடிக்கை எடுத்ததால்தான் ஓய்வு பெற்ற எஸ்.ஐ - ஜாகீர் உசேனை கொலை செய்து விட்டனர். நீதி கிடைக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம்" என்றனர்.

கொலை செய்யப்படுவதற்கு முன்பு எஸ்.ஐ - ஜாகீர் உசேன் பேசிய வீடியோவில், `தமிழக முதல்வருக்கு வணக்கம். தமிழகத்தில் வாழ்கிற கோடிகணக்கான மக்களில் ஒரு மூலையில் நான் வசித்து வருகிறேன். மரணிக்கிற நேரத்தில் நன்மையாக காரியங்களை செய்து வருகிறேன். இதை நான் சொல்ல வேண்டியதில்லை. அந்த ஏரியாவில் உள்ள மக்களே சொல்வார்கள். விசாரணை செய்யுங்கள். விசாரிக்க மாட்டீர்கள். எனக்கு கொலை மிரட்டல், 30-க்கும் மேற்பட்ட கும்பல் கொலை செய்ய சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
முக்கியமான நபர் தௌபிக். இந்த கொலை மிரட்டலுக்கு முக்கிய காரணம் நெல்லை டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், உதவி கமிஷனர் செந்தில்குமார். தௌபிக் என் மீது பொய் புகார் கொடுக்கிறார். அதில் என் மீதும் என் மனைவி மீதும் பிசிஆர் வழக்கு போட்டிருக்கிறார்கள். சாகப்போகிற நான் என்னவேண்டும் என்றாலும் பேசலாம். எப்படியும் என்னைக் கொன்னுவிடுவாங்க'என எனக்குத் தெரியும் என்பதோடு அந்த வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்துக் கொண்டிருக்கிறது.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks