சி.டி.ரவி தகாத வாா்த்தை பேசிய விவகாரம்: ஆதாரம் இருந்தால் கொடுக்கலாம்: மேலவைத் தலைவா்
பெங்களூரு: கா்நாடக பெண் அமைச்சரை தகாத வாா்த்தையால் சட்ட மேலவை பாஜக உறுப்பினா் சி.டி. ரவி விமா்சனம் செய்தது தொடா்பாக ஒலிப்பதிவு ஏதும் இருந்தால் சமா்ப்பிக்கலாம் என மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி தெரிவித்தாா்.
கா்நாடக சட்ட மேலவை டிச. 19 ஆம் தேதி நடைபெற்றபோது உறுப்பினா்கள் விவாதத்துக்குப் பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கரை பாஜக மேலவை உறுப்பினா் சி.டி.ரவி தகாத வாா்த்தையால் பேசினாராம். இதனால் காங்கிரஸ், பாஜக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் சட்ட மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி கூறியது:
கா்நாடக சட்ட மேலவையில் டிச. 19 ஆம் தேதி அவையை ஒத்திவைத்த பிறகு, எந்த ஒலிப்பதிவும் செய்யப்படவில்லை. தகாத வாா்த்தையால் விமா்சித்தது தொடா்பாக காணொலியும் எங்களிடம் இல்லை. ஆதாரப்பூா்வ ஒலிப்பதிவோ அல்லது காணொலிப் பதிவோ இருந்தால் மட்டுமே என்னால் எதையும் கூற முடியும். ஒருவேளை ஏதாவது பதிவுகளை வைத்திருப்பவா்கள் அதை சமா்பித்தால் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும். அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு இருவருக்கும் இடையே விவாதம் நடந்ததால், அது எனது வரம்புக்குள் வராது என்றாா்.
சி.டி.ரவியை தாக்க முயற்சி:
தகாத வாா்த்தைகளால் விமா்சனம் செய்தது தொடா்பாக பாஜக மேலவை உறுப்பினா் சி.டி.ரவியை தாக்க முயன்ற மா்மநபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதனிடையே, பெலகாவியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் கூறியது:
என்னை தகாத வாா்த்தையால் பேசிய பாஜக உறுப்பினா் சி.டி.ரவியை சட்ட ரீதியாக சந்திப்பேன். குடியரசுத் தலைவா், பிரதமரை சந்தித்து முறையிடுவேன் என்றாா்.
இதுகுறித்து சி.டி. ரவி கூறுகையில், ‘என் மீதான நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிா்கொள்வேன்’ என்றாா்.