Serial Update: அமெரிக்கா செல்லும் கனிகா; `கயல்’க்கு இனி புது சகோதரர்; கம் பேக் க...
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழக எம்.பி.க்கள் ஆதரவளிக்க வேண்டும்: இபிஎஸ், நயினார் நாகேந்திரன்
தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், பாஜக சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெயரை பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா அறிவித்தார்.
அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக குடியரசு துணைத் தலைவா் தோ்வு செய்யப்பட வேண்டும் என்றும் இதுதொடா்பாக எதிா்க்கட்சிகளிடமும் ஆலோசித்திருப்பதாக நட்டா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரி மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்கட்சியினரிடம் பேசி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களுடன் பேசிய இபிஎஸ்,
"தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி ஒருமனதாக ஆதரவு தெரிவித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் வருவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழக கட்சிகள் அனைத்தும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
அதேபோல தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தமிழகத்திலுள்ள இண்டி கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்! தமிழகத்தில் இருந்து பலமான தேசியக்குரல் அதிகாரமிக்கதாக இருக்க வேண்டுமென நினைத்து தற்போது துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழக மண்ணின் மைந்தரும், மகாராஷ்ட்டிர ஆளுநருமான அண்ணன் சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகியுள்ளது வரலாற்று சிறப்புமிக்க தருணம்.
ஒரு தமிழருக்கு கிடைக்கவிருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளைத் தாண்டி எல்லோரும் ஆதரித்தோம் என்று வரலாற்றில் பேசப்பட்டால், அது ஒரு ஆரோக்கியமான அரசியலை ஊக்குவிக்கும்.
இதற்கு இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆதரவு தருவது சிறப்பானதாக இருக்கும். ஆகவே, கட்சி வித்தியாசங்களைத் தாண்டி, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அவர்களுக்கு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
General Secretary of AIADMK Edappadi K. Palaniswami and TN BJP Leader Nainar nagendran urgest that All Tamil Nadu MPs should support C.P. Radhakrishnan who is NDA's vice presidential candidate
இதையும் படிக்க |வாக்குத் திருட்டு: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம்?