BB Tamil 9: ``அரோரா இருக்க இடத்துலதான் துஷார் இருப்பான்" - BB அப்சரா பேட்டி | Ex...
"சீனாவிடம் நட்பாக இருக்கவே எனக்கு ஆசை; ஆனால்.." -155 சதவிகித வரி விதிப்பு குறித்து ட்ரம்ப் விளக்கம்
சீனா நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்வரவில்லை என்றால் நவம்பர் 1ம் தேதி முதல் கூடுதலாக 100 சதவிகித வரி விதித்து மொத்த வரியை 155 சதவிகிதமாக அதிகரிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
அடுத்த சில வாரங்களில் ட்ரம்ப் - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடக்க உள்ளது. இந்த நிலையில், ட்ரம்பின் இந்த நடவடிக்கைகள் இரு நாட்டின் உறவிலும் விரிசலை உண்டாக்கலாம்.

சீனா ட்ரம்பின் இந்த வரி அச்சுறுத்தல்களுக்கு பணியாது. காரணம், கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா சீனா மீது 145 சதவிகிதம் வரை வரி விதித்தபோது, சீனா எதிர்வினையாக வரி விதித்ததே தவிர, பணியவில்லை.
இதனால், ட்ரம்ப் செயல்கள் மீண்டும் அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப் போரை உண்டாக்கலாம். இது பிற உலக நாடுகளையும் நிச்சயம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சீனாவின் மீதான இந்த 155 சதவிகித வரி விதிப்பு எச்சரிக்கைக் குறித்து ட்ரம்ப், "சீனாவிடம் நட்பாக இருக்கவே எனக்கு ஆசை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாவே சீனாதான் அமெரிக்காவிடம் கடுமையாக நடந்துகொள்கிறது. இதற்கு முன் இருந்த அமெரிக்க அதிபர்கள் வெளிநாட்டு வணிகத்தில் மெத்தனமாக இருந்துவிட்டனர். அதை சீனா மட்டுமல்ல பல்வேறு நாடுகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். என்னால் அப்படிவிட முடியாது.

ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென்கொரியா உடனான வர்தகங்கள் எல்லாம் நல்லமுறையில் நடந்து கொண்டிருக்கின்றன. சீனாவுடனான இந்த ஒப்பந்தம் என்பது அமெரிக்காவின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது." என்று பேசியிருக்கிறார்