சுமுகமான ஆட்சி மாற்றம்: டிரம்பை சந்தித்த பைடன் உறுதி!
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை புதிய அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.
வெள்ளை மாளிகைக்கு வருகைதந்த டிரம்பை வரவேற்ற ஜோ பைடன், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதையும் படிக்க : கெடுவை மீறினாலும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி: அமெரிக்கா
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்த நிலையில், 312 இடங்களில் வெற்றி பெற்று குடியரசுக் கட்சித் தலைவர் டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க விதிமுறைபடி, தேர்தலில் வெற்றி பெற்றாலும் அடுத்தாண்டு ஜனவரி மாதம்தான் டிரம்ப் முறைப்படி அதிபராக பொறுப்பேற்பார்.
இந்த நிலையில், தற்போதைய அதிபர் ஜோ பைடனை சந்திக்க வெள்ளை மாளிகை வந்த டிரம்பை, பைடனும் அவரது மனைவியும் வரவேற்றனர். மேலும், பைடனின் மனைவி கையால் எழுதிய வாழ்த்து கடிதத்தையும் டிரம்பிடம் அளித்துள்ளார்.
மேலும், டிரம்பை வரவேற்ற பைடன், “மீண்டும் வரவேற்கிறோம். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள், நாங்கள் சொன்னது போல் சுமுகமான மாற்றத்தை எதிர்நோக்குகிறோம். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்” எனத் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைடனுக்கு பதிலளித்த டிரம்ப், “அரசியல் கடினமானது, பல சூழல்களில் இந்த உலகம் இனிமையானதாக இருக்காது. ஆனால், இன்று நல்ல உலகமாக இருக்கிறது. அதை மிகவும் பாராட்டுகிறேன். மிகவும் சுமுகமான மாற்றமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில், வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ஜெஃப் ஜியண்ட்ஸ் மற்றும் டிரம்பால் நியமிக்கப்பட்ட புதிய தலைமை அதிகாரி சூசி வைல்ஸும் கலந்து கொண்டனர்.