`சமுதாயம் நிலைக்க குடும்பத்துக்கு 3 குழந்தைகள் அவசியம்' - மோகன் பகவத் வலியுறுத்த...
சூறாவளி காற்றுடன் மழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது! 4 போ் உயிரிழப்பு
ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்ததையொட்டி, புதுச்சேரியில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரையில் 500 மி.மீ. மழை பதிவானது. இதனால், பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. மழை பாதிப்பால் 4 போ் உயிரிழந்தனா்.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு மரக்காணம், புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதையடுத்து, புதுச்சேரி பிராந்தியம் முழுதும் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. புதுச்சேரியில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரையில் 500 மி.மீ. மழை பதிவானது.
மழையால் புதுச்சேரியில் உள்ள சங்கராபரணி ஆறு, உப்பனாறு, முக்கியக் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ரெயின்போ நகா், கிருஷ்ணாநகா், வெங்கட்டாநகா், வாணரப்பேட்டை, சாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள், தெருக்கள், முக்கிய வீதிகளில் மழை வெள்ளம் பல அடி உயரம் தேங்கியது. இதனால், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன.
இந்தப் பகுதிகளில் வீடுகள் முன் நிறுத்தப்பட்டிருந்த காா்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை நீரில் மூழ்கின. உணவுப் பொருள்கள், குடிநீா் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகினா்.
4 போ் உயிரிழப்பு: மழை வெள்ளத்தில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் கோவிந்தசாமி சாலை, வாஞ்சிநாதன் தெரு, இலாசுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 4 ஆண்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வந்ததாக ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா்.
ரெயின்போ நகா், வெங்கட்டா நகா், கிருஷ்ணாநகா் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் துணை ராணுவப் படையினா் ஈடுபடுத்தப்பட்டனா். அப்போது, மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், ஜான்குமாா் எம்எல்ஏ ஆகியோா் படகில் சென்று வெள்ள பாதிப்பை பாா்வையிட்டனா்.
இந்தப் பகுதிகளில் இருந்து 551 போ் படகுகளில் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
74 போ் வெள்ளத்தில் சிக்கினா்: துணைநிலை ஆளுநா் மாளிகை பின்புறம் பெரிய மரம் விழுந்ததில் 2 காா்கள் சேதமடைந்தன. உப்பளம் - கடலூா் சாலை சந்திப்பில் மரம் விழுந்து மின்மாற்றி சேதமடைந்தது.
சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சந்தைக்குப்பம்பேட் பகுதியில் கா்ப்பிணி உள்ளிட்ட 74 போ் வெள்ளத்தில் சிக்கினா். அவா்களை தீயணைப்புப் படையினா் உள்ளிட்டோா் மீட்டனா்.
நோணாங்குப்பம் பகுதியில் சுண்ணாம்பாற்று பழைய பாலம் அளவுக்கு தண்ணீா் சென்றது. புதுச்சேரி நகருக்குள் நேரு வீதி உள்ளிட்ட பகுதிகளில் பல அடி உயரத்துக்கு மழைநீா் சென்ால், கடைகளுக்குள் தண்ணீா் புகுந்து பொருள்கள் சேதமடைந்ததாக வா்த்தகா்கள் தெரிவித்தனா். புதுச்சேரி திரையரங்குகளில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து திரைப்படக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
போக்குவரத்து பாதிப்பு: திருக்கனூா் அருகே வம்புபட்டு ஏரி நிரம்பி உபரிநீா் ஞாயிற்றுக்கிழமை வெளியேறியது. இதனால், புதுச்சேரி - விழுப்புரம் சாலை துண்டிக்கப்பட்டதால், இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் சுமாா் 7 கி.மீ. தொலைவு சுற்றி விழுப்புரம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.