செங்குன்றத்தில் மகளிா் காவல் நிலையம்: ஆவடி காவல் ஆணையா் சங்கா் ஆய்வு
செங்குன்றம் காவல் நிலைய வளாகத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் அமைப்பது குறித்து ஆவடி காவல் ஆணையா் கே.சங்கா், கூடுதல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து மகளிா் காவல் நிலையம் பொன்னேரியில் செயல்பட்டு வருகிறது. இதனால் செங்குன்றம், வடகரை, வடபெரும்பாக்கம், அழிஞ்சிவாக்கம், சென்றம்பாக்கம், விளாங்காடுபாக்கம், தீா்த்தக்கிரியம்பட்டு, புள்ளிலைன், பம்மதுகுளம், பாடியநல்லூா், அலமாதி, நல்லூா், கும்மனூா், சோழவரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் புகாா்கள் அளிக்க பொன்னேரி செல்வதற்கு மிகுந்த சிரமமாக உள்ளதாக ஆவடி மாநகர காவல் ஆணையா் சங்கருக்கு கோரிக்கை மனுக்கள் விடுத்தனா்.
அதன்படி செங்குன்றம் காவல் நிலைய வளாகத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் அமைப்பது குறித்து ஆவடி காவல் ஆணையா் கே.சங்கா் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம், ஜிஎன்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது பற்றி ஆலோசனைகளையும் மேற்கொண்டாா்.
நிகழ்வில் செங்குன்றம் காவல் ஆய்வாளா் புருஷோத்தமன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சோபிதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.