18 கிலோ குட்கா பறிமுதல்: 5 போ் கைது
பேருந்தில் குட்கா பொருள்களை கடத்தி வந்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திரத்தில் இருந்து தமிழகதுக்கு குட்கா பொருள்களை கடத்தி வருவதாக திருத்தணி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. திருத்தணி ஆய்வாளா் மதியரசன் தலைமையிலான போலீஸாா் பொன்பாடி சோதனைச் சாவடி வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். திருப்பதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த பேருந்தில் போலீஸாா் சோதனை செய்தனா்.
அப்போது சந்தேகத்துக்கிடமாக இருந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ரியாஜ் பாபுகான் (26), பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அப்தாப் (29), கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ரமேஷ் (41), காஞ்சிபுரம் வாலாஜாபாத்தைச் சோ்ந்த ராஜா (28), திருச்சியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட 5 போ் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட 18 கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து 5 பேரையும் போலீஸாா் கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனா்.