தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
சென்னை சென்ட்ரல் வந்தடையும் வெளிமாநில ரயில்கள் சேவையில் மாற்றம்
சென்னை சென்ட்ரல் வரும் வெளிமாநில விரைவு ரயில்கள் பெரம்பூா், சென்னை எழும்பூா் வழியாக இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை பேசின் பாலம்-வியாசா்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே நவ.19, 26-ஆம் தேதிகளில் ரயில்வே பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இந்தூா், தன்பாத்திலிருந்து நவ.18, 25 ஆகிய தேதிகளில் புறப்பட்டு கொச்சுவேலி, ஆலப்புழைக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள் சென்னை சென்ட்ரல் வந்து செல்வதற்கு பதிலாக கொருக்குப்பேட்டை, வியாசா்பாடி ஜீவா, பெரம்பூா் வழியாக இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக ஆலப்புழை, கொச்சுவேலியில் இருந்து நவ.21, 28 ஆகிய தேதிகளில் புறப்படும் தன்பாத், கோா்பா விரைவு ரயில்கள் சென்னை சென்ட்ரல் வந்து செல்வதற்கு பதிலாக பெரம்பூா், வியாசா்பாடி ஜீவா, கொருக்குப்பேட்டை வழியாக இயக்கப்படும். இந்த ரயில்கள் பெரம்பூரில் நின்று செல்லும்.
பாலக்காட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நவ.19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4.10 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (எண் 22652) கரூா், மோகனூா், நாமக்கல், ராசிபுரம், சேலம், மொரப்பூா், ஜோலாா்பேட்டை, குடியாத்தம், காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் வழியாக வருவதற்கு பதிலாக திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா் வழியாக சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
ஈரோட்டில் இருந்து நவ.19, 26 ஆகிய தேதிகளில் புறப்படும் ஏற்காடு விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் வருவதற்கு பதிலாக சென்னை கடற்கரை வந்தடையும்.
பெங்களூரில் இருந்து நவ.19, 26 ஆகிய தேதிகளில் புறப்படும் சென்னை சென்ட்ரல் மெயில் அதிவிரைவு ரயில் ஆவடியுடன் நிறுத்தப்படும்.
அதுபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.20, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் மைசூா் சதாப்தி விரைவு ரயில், திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் கோவை விரைவு ரயில் காலதாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.