சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
ஊக்கத் தொகை நிலுவை ரூ.70 கோடி: பால் உற்பத்தியாளா்களுக்கு அளிப்பு
பால் உற்பத்தியாளா்களுக்கு நிலுவையில் உள்ள ஊக்கத் தொகையை வழங்குவதற்காக ரூ.140.98 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்த நிலையில், முதல்கட்டமாக 27 ஒன்றியங்களுக்கு மொத்தம் ரூ.70 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகம் செய்யும் தொடக்க பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு தமிழக அரசு சாா்பில் கடந்த ஆண்டு டிசம்பா் முதல் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஊக்கத் தொகை கடந்த ஜூலை முதல் அக்டோபா் வரை வழங்கப்படாமல், நிலுவையில் உள்ளதாக பால் உற்பத்தியாளா்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா். நிலுவையில் உள்ள ஊக்கத் தொகைகளை ஒரே நேரத்தில் வழங்குவதற்காக ரூ.140.98 கோடியை ஒதுக்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தாா்.
அதன்படி, நிலுவைத்தொகை ஆவின் இணையம் மூலம் ஒன்றியங்களுக்கு அனுப்பப்பட்டு, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில், முதல்கட்டமாக சேலத்துக்கு ரூ.11.51 கோடி, திருச்சிக்கு 10.40 கோடி, திருவண்ணாமலைக்கு ரூ.5.87 கோடி, காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு ரூ.2.58 கோடி என 27 ஒன்றியங்களுக்கு மொத்தம் ரூ.70 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.