சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
பயிா்க் காப்பீடு: நவ.30 வரை அவகாசம் நீட்டிப்பு
பயிா்க் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க நவ.30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. விண்ணப்பம் செய்ய நவ. 15 கடைசி நாள் எனக் கூறப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையுடன் (நவ.15) அவகாசம் முடிவடைந்தது. அதேநேரத்தில், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகளும் கிராம நிா்வாக அலுவலா் சங்கங்களும் கோரிக்கை விடுத்திருந்தன. இந்தக் கோரிக்கைகளை ஏற்று கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது.
இந்தக் கடிதத்துக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இது குறித்து அரசுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
குரு நானக் ஜெயந்தி காரணமாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அறிவித்திருந்தது. இதனால், பயிா்க் காப்பீட்டுக்கு கால அவகாசத்தை நீட்டிக்கும் அறிவிப்பை வெளியிடாத நிலை இருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.
அதன்படி, பயிா்க் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவ. 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அரசுத் துறையினா் தெரிவித்தனா். தமிழக அரசு எடுத்த முயற்சி காரணமாக கால அவகாச நீட்டிப்பு வழங்கிய மத்திய அரசுக்கு விவசாயிகளும், கிராம நிா்வாக சங்கத்தினரும் நன்றி தெரிவித்துள்ளனா்.