மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இ...
சென்னை: தொழிலதிபரை நம்பவைத்து ரூ.10 லட்சம் மோசடி; `சென்ட்டிமென்ட்' சங்கர் சிக்கியது எப்படி?
திருச்சி மாவட்டம், இளங்காகுறிச்சி, பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது நசுருதீன் (43). இவர் கட்டட பொருள்கள் சப்ளை மற்றும் பெயின்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு தொழில் முறையில் சுதன் என்பவர் மூலம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த சங்கர் என்பவர் அறிமுகமானார். பின்னர் சங்கரும் முகமது நசுருதீனும் நட்பாக பழகி வந்தனர். கடந்த 2024-ம் ஆண்டு சங்கர், தனது தங்க நகை அடமானத்தில் உள்ளதாகவும் அந்தக் கடனை அடைக்க உதவி செய்யுங்கள் என முகமது நசுருதீனிடம் சங்கர் சென்டிமெண்ட்டாக பேசியிருக்கிறார். அதனால் சங்கருக்கு உதவி செய்ய விரும்பிய தொலதிபர் முகமது நசுருதீன், கடந்த 8.10.2024-ம் தேதி சென்னைக்கு பத்து லட்சம் ரூபாயுடன் வந்தார். பின்னர் சங்கரைச் சந்தித்த முகமது நசுருதீன், உனக்கு நான் பணம் கொடுத்து உதவி செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து தங்க நகைகளை அடகு வைக்க அண்ணாசாலையில் உள்ள தனியார் வங்கிக்கு முகமது நசுருதீனை சங்கர் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது சங்கர், முகமது நசுருதீனிடமிருந்த பத்து லட்சம் ரூபாய் பையை வாங்கிக் கொண்டு வங்கிக்குள் நுழைந்திருக்கிறார்.
பின்னர் அவர் எஸ்கேப் ஆகிவிட்டார். நீண்ட நேரம் வங்கியில் காத்திருந்த முகமது நசுருதீன் சங்கரைத் தேடியிருக்கிறார். அதோடு அவரை செல்போனில் தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது சங்கரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் தொழிலதிபர் முகமது நசுருதீன், புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சங்கரை அண்ணாசாலை போலீஸார் பிடித்தனர். பின்னர் அவரிடமிருந்து 50,000 ரூபாய், ஐ போன் உள்பட மூன்று செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதான சங்கர் மீது ஏற்கெனவே சென்னை அண்ணாசாலை, வடக்கு கடற்கரை, காரைக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய காவல் நிலையங்களில் இதே ஸ்டைலில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் சென்டிமெண்ட்டாக பேசி பணத்தை மோசடி செய்வதை வழக்கமாக வைத்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.