சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ: நிலம் கையகப்படுத்த அனுமதி!
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ விரிவாக்கத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூா், வண்டலூா் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் மொத்தமாக 15.46 கிலோ மீட்டா் தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் மூலம் நேரடியாக கிளாம்பாக்கம் வரை செல்லலாம்.
இந்த மெட்ரோ விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தமிழக அரசிடம் சமா்ப்பித்த நிலையில், ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யவும், மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதற்கான பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மெட்ரோ விரிவாக்கத்துக்கான நிலத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.