டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி!
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் சோதனையை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரிய தமிழக அரசின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபடுவதாகக் கூறி, தகவல் கிடைத்ததையடுத்து, சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 ஆம் தேதிமுதல் 8 தேதிவரையில் சுமார் 60 மணிநேரம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனை சட்டவிரோதமானது என்றும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளைத் துன்புறுத்தியதாகவும் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கானது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்த அமலாக்கத் துறைக்கு அனுமதி இருப்பதாகக் கூறி, வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து, நீதிமன்றம் கூறியதாவது, கடந்த 2017 முதல் 2024 ஆம் ஆண்டுவரை, பதிவு செய்யப்பட்ட 41 முதல் தகவல் அறிக்கைகள் அடிப்படையில்தான் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்த, அமலாக்கத்துறைக்கு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது அல்ல; அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேச நலனுக்கானதுதான். நள்ளிரவு சோதனையின்போது, ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதையும் ஏற்க முடியாது.
அதுமட்டுமின்றி, டாஸ்மாக் நிறுவனத்தின் பெண் அதிகாரிகள், ஊழியர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, அமலாக்கத்துறை விசாரணையை மாநில அரசு தடுக்க முயற்சிக்கிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ஏற்காது. தங்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்பட்டிருந்தால், தனிப்பட்ட அதிகாரிகள் வழக்கு தாக்கல் செய்யலாம்.
அமலாக்கத் துறையின் சோதனைக்கு எதிராக தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் ஏன் வழக்கு தாக்கல் செய்தன? அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோ என்ற கேள்வியும் எழுகிறது என்று தெரிவித்தனர்.
இதையும் படிக்க:சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆள்மாறாட்டம் மூலம் 5.3 மில்லியன் டாலர் வருவாய்!