IPL 2025: ருதுராஜ், சாம்பா, ஃபர்குசன்... சீசனை விட்டு வெளியேறிய வீரர்கள் யார் யார்?
IPL 2025 சீசன் பல ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸுடன் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. வீரர்கள் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வருவதும் எதிர்பாராத தருணத்தில் வெளியேறுவதுமாக சினிமாவைத் தாண்டிய பரபரப்பு ஒவ்வொரு அணியிலும் தெரிகிறது.
முந்தைய அணியை ரிவன்ஜ் செய்யும் சிலர், உடன் விளையாடிய நண்பர்களுக்கு (அண்ணன்களுக்கு) எதிராக பந்து வீச தயங்கும் சிலர்...
இந்த டோர்னமண்ட் ப்ளாட்களில் மிகவும் துரதிர்ஷ்டவசமானது காயம் காரணமாக வெளியேறுவது. அப்படி காயம் காரணமாக சீசனில் இருந்தே வெளியேறிய போட்டியாளர்களைப் பார்க்கலாம்.
அல்லா கசன்ஃபர் (மும்பை இந்தியன்ஸ்)

மும்பை அணியால் 4.8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர் அல்லா கசன்ஃபர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு மாற்று வீரராக அதே நாட்டைச் சேர்ந்த முஜீப்-உர்-ரஹ்மான் சேர்க்கப்பட்டார்.
லிசாத் வில்லியம்ஸ் (மும்பை இந்தியன்ஸ்)

தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் லிசாத் வில்லியம்ஸ் ரூ.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். SA20 தொடரின் 2023/24 சீசன்களில் சிறப்பாக பந்துவீசி 9 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் எடுத்து தனக்கென ஒரு பெயரை சம்பாதித்துக்கொண்டார்.
முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக சீசனில் இருந்து அவர் வெளியேறினார். அவருக்கு மாற்றாக தென்னாப்பிரிக்க ஆல் ரவுண்டர் கார்பின் போஷ் அணியில் சேர்க்கப்பட்டார்.
உம்ரான் மாலிக் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

ஏலத்தில் ரூ.75 லட்சத்துக்கு எடுக்கப்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர். முதுகில் காயம் ஏற்பட்டதால் சீசன் தொடங்குவதற்கு முன்பே அவர் வெளியேறினார். அவருக்கு பதிலாக சேதன் சகாரியா அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
மோசின் கான் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் 4 கோடி ரூபாய் விலைக்கு தக்கவைக்கப்பட்ட இவர், முந்தைய சீசன்களில் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்துள்ளார்.
இந்த சீசனில் காயம் காரணமாக இவர் விலகியதால் ஷர்துல் தாக்கூர் இவருக்கு மாற்றாக சேர்க்கப்பட்டார். இந்த சீசனில் ஷர்துல் முக்கிய பௌளராக இருந்துவருகிறார்.
பிரைடன் கார்ஸ் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

இங்கிலாந்தைச் சேர்ந்த இந்த வேகப்பந்து வீச்சாளர், ஒரு கோடி விலைக்கு ஹைத்ராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இப்போது பந்துவீச்சில் திணறி வரும் சன்ரைசர்ஸ் அணியை இவர் நிச்சயமாக பலப்படுத்தியிருக்கக் கூடும்.
ஆனால் சீசன் தொடங்கும் முன்னரே கால்விரல் காயம் காரணமாக இவர் வெளியேறியதால், இவருக்கு பதில் தென்னாப்பிரிக்கா ஆல்ரவுண்டர் வியான் முல்டர் சேர்க்கப்பட்டார்.
க்ளென் ஃபிலிப்ஸ் (குஜராத் டைடன்ஸ்)

ஏலத்தில் 2 கோடி ரூபாய் விலைக்கு வாங்கப்பட்டார் நியூ சிலாந்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் க்ளென் ஃபிலிப்ஸ்.
இவருக்கு இடுப்பில் ஏற்பட்ட காயத்துக்காக இலங்கை ஆல்ரவுண்டர் தசுன் ஷனகா இவருக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்டார்.
ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்)

சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் ஆர்ச்சர் வீசிய பந்து இவரது முழங்கையில் காயத்தை ஏற்படுத்தியது.
இதனால் சீசனில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார். இவருக்கு பதிலாக, 17 வயது ஆயுஷ் மாத்ரே சேர்க்கப்பட்டார்.
ஆடம் சாம்பா (சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத்)

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியால் ரூ.2.40 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட ஸ்பின் பௌலர். இவர் காயம் காரணமாக வெளியேறியதால் ஸ்மரண் ரவிச்சந்திரன் என்ற பேட்ஸ்மேன் சேர்க்கப்பட்டார்.
லோக்கி ஃபர்குசன் (பஞ்சாப் கிங்ஸ்)

நியூ சிலாந்து வேகப்பந்து வீச்சாளரான இவர் 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். நல்ல ஃபார்மில் சில போட்டிகள் விளையாடிய இவர், தொடை தசைநார் காயம் காரணமாக சீசனில் இருந்து வெளியேறியுள்ளார். இவருக்கு மாற்றாக அணியில் யார் இணைவார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
குர்ஜப்னீத் சிங் (சென்னை சூப்பர் கிங்ஸ்)

இந்திய அணிக்காக இன்னும் தேர்வாகாத இந்த வேகப்பந்து வீச்சாளர் 2.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.
இவருக்கு மாற்றாக தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் டெவால்ட் பிரெவிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
