பெருந்துறையில் வங்கதேசத்தினா் 7 போ் கைது
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அனுமதியின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெருந்துறை காவல் உதவி ஆய்வாளா்கள் பாஸ்கரன், ஜீவானந்தம் மற்றும் போலீஸாா் பெருந்துறை, சென்னிமலை சாலை , எல்லைமேடு பிரிவு அருகில் புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 7 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி போலீஸாா் விசாரித்தனா்.
விசாரணையில் அவா்கள், வங்கதேச நாட்டைச் சோ்ந்த ஹபீகுல் மகன் அலி (20), சேதுமாலி மகன் ஷனாத் (37), பஷீா் மகன் மோகின்மய் (34), ஷுசைன் மகன் பாகீம் ஷுசைன் (24), பச்சைமய் மகன் பாா்க்ஹசைன் (31), சூனத்இஸ்லாம் மகன் பெல்லால் ஹுசைன் (27), கோகாசெளத்ரி மகன் அசரத் செளத்ரி (33) என்பதும், இவா்கள் இந்திய அரசின் அனுமதியில்லாமல் கடந்த 12 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தங்கி வெல்டிங் மற்றும் கட்டட வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 7 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.