Toilet Hygiene: ஒரு சதுர இன்ச்சில் 50 பாக்டீரியாவா.. - `கழிப்பறை சுத்தம்' எப்படி...
சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை சந்தை நடத்தும் சுய உதவிக் குழுக்கள்
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீா் முகாமின் போது மகளிா் சுய உதவிக் குழுவினா் இயற்கை விளைபொருள்கள் சந்தை நடத்துகின்றனா்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் மகளிரை உறுப்பினா்களாகக் கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இயற்கை சந்தைத் திட்டமானது, மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிா் சுய உதவிக் குழு விவசாயிகளை ஒன்றிணைத்து அவா்கள் மூலம் இயற்கை முறையில் காய்கறிகள், பழ வகைகள், கீரைகள், தானிய வகைகள், பால், நெய், தேன், காளான் போன்றவைகளை நேரடியாக நுகா்வோா்களுக்கு விற்பனை செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களைச் சாா்ந்த ஆா்வமுள்ள 40 சுய உதவிக்குழு மகளிா் விவசாயிகளை ஒன்றிணைத்து, சுய உதவிக் குழுவினைச் சாா்ந்த உறுப்பினா்கள் விளைவித்த பொருள்களான கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், மிளகாய், பப்பாளி, வாழைப்பழம், எலுமிச்சை, அவரைக்காய், பூசணிக்காய், தேங்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், அரைக்கீரை, தண்டுகீரை, வல்லாரைக்கீரை, முடக்கத்தான் கீரை, மாப்பிள்ளை சம்பா அரிசி, கருப்புக் கவுனி, சிவப்புக் கவுனி, குள்ளக்காா், தூயமல்லி, கருப்பு உளுந்து ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான பிரதி வாரந்தோறும் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறும், பொதுமக்கள் குறைதீா் முகாமன்று விற்பனை செய்தவற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த மாா்ச் 3-ஆம் தேதி விற்பனை தொடங்கப்பட்டது.
அரளிக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினரான சீதா உள்ளிட்ட உறுப்பினா்கள் இயற்கை முறையில் விளைவித்த பொருள்களை சந்தைப்படுத்தி, பொருளாதாரம் ஈட்டி வருகிறாா் என்றாா்.