மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்
மாம்பழ சீசன் தொடங்கியது: இனிக்கும் இமாம் பசந்த் விலை!
மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், காவிரியின் தனித்த அடையாளமாக விளங்கும் இமாம்பசந்த் மாம்பழத்தின் விலையும் இந்தாண்டு குறைவாகவே இருப்பது மக்களுக்கு இனிக்கும் செய்தியாக உள்ளது.
சேலம் மட்டுமே மாம்பழத்துக்கு பெருமை என்ற பெயரை மாற்றும் வகையில் காவிரிக் கரையில் விளையும் இமாம்பசந்த் ரகங்கள் பிரசித்தி பெற்றவை. இதனாலேயே ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் உள்ள சாலைக்கு மாம்பழச் சாலை என்ற பெயரும் கிடைத்துள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தா்கள், மாம்பழ சீசனில் மட்டும் கிடைக்கக் கூடிய இமாம்பசந்த் ரகங்களை ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா். திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் உள்ளது மாம்பழச் சாலை. இங்கு காவிரிக் கரையில் உள்ள தோட்டங்களில் விளையும் மாம்பழங்களுக்கு எப்போதும் தனிச்சுவை உண்டு. குறிப்பாக தாத்தாச்சாரியா் தோட்டத்து இமாம்பசந்த் மாம்பழம் குறிப்பிடத்தக்கது. இதுதவிர மல்கோவா, பங்கனப்பள்ளி, நீலம், ருமேனியா, செந்தூரம் உள்ளிட்ட வகைகளும் இங்கு விளைகின்றன.
ஆண்டுதோறும் மாா்ச் மாதம் தொடங்கும் மாம்பழ சீசன் ஜூன் கடந்தும் நீடிக்கிறது. இருப்பினும் ஆண்டு முழுவதுமே மாம்பழமும், மாங்காய்களும் இந்தப் பகுதியில் கிடைப்பது கூடுதல் சிறப்பு. இந்தாண்டு விலையும் குறைவாக இருப்பது இனிக்கும் செய்தியாகும்.
இதுதொடா்பாக இப் பகுதியில் உள்ள வி.எஸ். மணி மாம்பழ கடை உரிமையாளா் ஜி. பாபு கூறுகையில், மாம்பழச் சாலையில் உள்ள தோட்டங்களில் இமாம் பசந்த், செந்தூரம், பங்கனப் பள்ளி, அல்போன்சா, நீலம், காவேரி, இமாம்பசந்தோட இன்னொரு வகை மாம்பழம், கல்லாமணி, ரூமானி, கிளிமூக்குன்னு 10-க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் விளைகின்றன. இமாம்பசந்த் பழத்துக்கு வரவேற்பு அதிகம் இருப்பதால், பெரும்பாலும் சந்தைக்கு வரும் முன்னரே தோட்டத்துக்கே வந்து வியாபாரிகள் பழங்களை வாங்கிச் சென்றுவிடுவா் என்றாா்.
மற்றொரு வியாபாரியான சதீஷ் கூறுகையில், மும்பை, புதுதில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் இங்கிருந்து இமாம்பசந்த் பழம் அனுப்பப்படுகிறது. மாம்பழச் சாலையில் தற்போது சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு விலை குறைவாகவே உள்ளது. கடந்தாண்டு ரூ.200க்கு விற்ற இமாம்பசந்த் இப்போது கிலோ ரூ.150-க்கு விற்கப்படுகிறது. இதேபோல பங்கனப்பள்ளி கிலோ ரூ. 100, செந்தூரம் கிலோ ரூ.80, அல்போன்சா ரூ.120 என்ற விலையில் உள்ளது. அடுத்து வரும் மாதங்களில் மல்கோவா, கிளிமூக்கு, காலப்பாடி உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
திருச்சி காந்திசந்தையில் உள்ள பழ மண்டி வியாபாரிகள் கூறுகையில்,தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பெங்களூருவிலிருந்தும் அதிகப்படியாக மாம்பழங்கள் வருகின்றன. கிலோ ரூ.80 முதல் ரூ.180 வரை அந்தந்த ரகத்துக்கு ஏற்ப விலை உள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் விலை குறைவுதான் என்பதால் மக்களும் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனா் என்றனா்.