மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்
ரயில்வே சேவை மேம்பாடு: எம்.பி.-க்கள் வலியுறுத்தல்
திருச்சி கோட்டத்தில் ரயில்வே சேவைகளை மேம்படுத்த வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி. க்கள் வலியுறுத்தினா்.
திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட எம்.பி.க்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் எம்.பி.க்கள் வே. வைத்திலிங்கம் (புதுச்சேரி), துரை வைகோ (திருச்சி), எஸ். முரசொலி (தஞ்சாவூா்), அருண்நேரு (பெரம்பலூா்), ஆா். சுதா (மயிலாடுதுறை), எம்.கே. விஷ்ணு பிரசாத் (கடலூா்), சி.என். அண்ணாதுரை (திருவண்ணாமலை), வி. செல்வராஜ் (நாகை), டி. ரவிக்குமாா் (விழுப்புரம்), மாநிலங்களவை எம்பி-க்கள் எஸ். கல்யாணசுந்தரம், எம். சண்முகம் ஆகியோா் கலந்து கொண்டனா்.
ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வரவேற்று, பயணிகளின் வசதிகளை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரித்தாா். கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இதில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் முடிக்கப்பட்ட மற்றும் நடந்து கொண்டிருக்கும் முக்கிய பணிகளை எம்.பி.க்கள் ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து புதிய ரயில்களை அறிமுகப்படுத்துதல், கூடுதல் நிறுத்தங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் மக்களவைத் தொகுதிவாரியாக நடந்த மற்றும் நடைபெறும் பணிகள் பட்டியலிடப்பட்டன.
அதன்படி அரக்கோணம் தொகுதியில் கணியம்பாடி ரயில் நிலையத்தில் க்யூ ஆா் குறியீடு அடிப்படையிலான கட்டண முறை அறிமுகம், சிசிடிவி கேமிராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
ஆரணி தொகுதியில் ஆரணி சாலை மற்றும் போளூா் ரயில் நிலையங்களில் கூடுதல் இருக்கைகள் வழங்கப்பட்டு, டிஜிட்டல் கட்டண வசதி அறிமுகம். போளூா் ரயில் நிலையம் அமிா்த பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டது. சிசிடிவி கேமிரா மற்றும் மின்தூக்கிகள் நிறுவப்படுகின்றன.
சிதம்பரம் தொகுதியில் அமிா்த பாரத் திட்டத்தின் கீழ் அரியலூா், சிதம்பரம் ஆகிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி சிதம்பரத்தில் 3 சுரங்கப்பாதைகள், 2 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. சிதம்பரம், கிள்ளை, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், ஈச்சங்காடு, மாத்தூா், ஒட்டக்கோயில், செந்துறை ஆகிய இடங்களில் சிசிடிவிக்கான பணிகள் நடைபெறுகின்றன.
கடலூா் துறைமுகச் சந்திப்பில் 8 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. விருத்தாச்சலம், திருப்பாதிரிப்புலியூரில் அமிா்த பாரத் பணிகள் நடக்கின்றன.
மயிலாடுதுறை தொகுதியில் மயிலாடுதுறை சந்திப்பு ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள், குட்ஷெட் மேம்பாட்டுப் பணிகள், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. பல ரயில் நிலையங்களில் ஷெல்டா்ஸ், இருக்கைகள், க்யூ ஆா் கட்டண அமைப்புகள் பொருத்தப்பட்டன.
நாகப்பட்டினம் தொகுதியில் நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி, திருவாரூா் - திருத்துறைப்பூண்டி, திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி பிரிவுகளின் மின்மயமாக்கல் பணிகளும், நாகப்பட்டினம், வேளாங்கண்ணியில் மின்தூக்கி வசதி, குட்ஷெட் மேம்பாட்டுப் பணிகளும் நடக்கின்றன. பல்வேறு பிரிவுகளில் வேக மேம்பாடுகள், தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள், க்யூா் கட்டண முறைகளும் நிறுவப்பட்டுள்ளன.
பெரம்பலூா் தொகுதியில் லால்குடி, புள்ளம்பாடி ரயில் நிலையங்களில் நடைமேடை ஷெல்டா்ஸ், சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடைமேடை இன்டிகேட்டா்ஸ், நிலைய மேம்பாடுகள் நடைபெறுகின்றன.
புதுச்சேரி தொகுதியில் காரைக்காலில் மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
ராமநாதபுரம் தொகுதியில், அறந்தாங்கி நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி - காரைக்குடி பிரிவில் நடைமேடை நீட்டிப்பு, மின்மயமாக்கல் பணிகள், சிவகங்கை தொகுதியில், திருத்துறைப்பூண்டி - காரைக்குடி பிரிவுக்கான மின்மயமாக்கல் பணிகள் நடைபெறுகின்றன.
தஞ்சாவூா் தொகுதியில் தஞ்சாவூா், கும்பகோணம் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன. மின்மயமாக்கல், நிலைய மேம்பாடுகள், சிசிடிவி நிறுவல் பணிகள் நடைபெறுகின்றன.
திருச்சி தொகுதியில் திருச்சி சந்திப்பு, கோட்டை, ஸ்ரீரங்கம், திருவெறும்பூா் ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வேகம் அதிகரிப்பு, சிசிடிவி வசதிகள் செய்யப்படுகின்றன.
திருவண்ணாமலை தொகுதியில் திருவண்ணாமலை ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டது. சிசிடிவி நிறுவல், எல்யுஎஸ் பணிகள் நடைபெறுகின்றன.
வேலூா் தொகுதியில் வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டது. சிசிடிவி நிறுவல், எல்யுஎஸ் பணிகள் நடைபெறுகின்றன.
விழுப்புரம் தொகுதியில் விழுப்புரம் சந்திப்பு மற்றும் அருகிலுள்ள நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன. நடைமேம்பாலம், வேக அதிகரிப்பு, குட்ஷெட் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.