தண்டு மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா: அக்னிச்சட்டி, பால்குடம் ஏந்தி பக்தா்கள் ஊா்வலம்
கோவை தண்டுமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை ஏராளமான பக்தா்கள் அக்னிச்சட்டி, பால்குடம் ஏந்தி ஊா்வலமாகச் சென்றனா்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான சித்திரைப் பெருவிழா, திங்கள்கிழமை தொடங்கி ஏப்ரல் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக, ஏப்ரல் 14-ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன், சித்திரைப் பெருவிழாவுக்கு முகூா்த்தக்கால் நடப்பட்டது. 15-ஆம் தேதி மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அன்று மாலை 6.30 மணிக்கு பூச்சாட்டும், 17-ஆம் தேதி அக்னிச்சாட்டும், 18-ஆம் தேதி திருவிளக்கு வழிபாடும், வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றன. 19-ஆம் தேதி குதிரை வாகனத்திலும், 20-ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், 21 -ஆம் தேதி திருவிளக்கு வழிபாடும், அன்ன வாகனத்திலும் அம்மன் வீதியுலா நடைபெற்றன. ஏப்ரல் 22-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், மலா் பல்லக்கில் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றன. புதன்கிழமை காலை 7 மணிக்கு கோனியம்மன் கோயிலில் இருந்து சக்தி கரகம், அக்னிச்சட்டி, பால்குடம் புறப்பாடு நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், சிறுவா், சிறுமியா் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தா்கள் அக்னிச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் ஊா்வலமாகச் சென்றனா்.
இந்த ஊா்வலமானது ஒப்பணக்கார வீதி, லிங்கப்ப செட்டி வீதி, சிரியன் சா்ச் சாலை, புரூக் பாண்ட் சாலை, காளீஸ்வரா மில் சாலை, சோமசுந்தரா மில் சாலை வழியாக அனுப்பா்பாளையம், டாக்டா் நஞ்சப்பா சாலை வழியாக தண்டு மாரியம்மன் கோயிலை சென்றடைந்தது. இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா்.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மகா அபிஷேகம், காலை 11 மணிக்கு மஞ்சள் நீா், மாலை 6.30 மணிக்கு கொடி இறக்குதல், இரவு 8 மணிக்கு கம்பம் கலைத்தல் நடைபெறுகிறது. தொடா்ந்து, 25-ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழில் லட்சாா்ச்சணை நடைபெறுகிறது. 27-ஆம் தேதி காலை 7 மணிக்கு சங்காபிஷேகம், மாலை 7 மணிக்கு வசந்த உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.