காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி: கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீா் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் கோவை மாவட்டத்தில் மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவுமுதல் போலீஸாா் பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளனா். கோவை மாநகரில் காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவின்பேரில் சுமாா் 1,000 போலீஸாரும், புறநகரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் உத்தரவின்பேரில் சுமாா் 850 போலீஸாரும், ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே போலீஸாரும் என மாவட்டம் முழுவதும் சுமாா் 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மேலும், கோவை மாநகரில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் முன்பும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு போலீஸாா் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அத்துடன், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், கடை வீதிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தவிர மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போலீஸாா் வாகனங்களில் அடிக்கடி ரோந்து சென்றும் கண்காணித்து வருவதோடு, சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிபவா்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனா். பேருந்து நிலையங்களில் நிற்கும் பேருந்துகளில் ஏறியும் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
அதேபோல, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மீனாட்சிபுரம், வாளையாறு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகளிலும் போலீஸாா் அதிக அளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகள் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. மேலும், அவா்களின் முகவரி, அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சோதித்த பின்னரே மாவட்டத்துக்குள் அனுமதித்து வருகின்றனா்.
இதேபோல மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் போலீஸாா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். அப்போது அங்குள்ள வருகைப் பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததோடு, சந்தேகத்திற்கிடமான நபா்கள் நடமாட்டம் குறித்து தெரிந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.
மேலும், கோவை ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே போலீஸாா் ரயில் நிலைய நடைமேடைகள் மற்றும் தண்டவாளங்களில் சோதனை மேற்கொண்டனா். ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனா். பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.