பயங்கரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் -முதல்வா் மு.க.ஸ்டாலின்
பயங்கரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று காஷ்மீா் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
மேலும், காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழா்களுக்கு உதவ, கூடுதல் ஆட்சியா் அப்தாப் ரசூல் நேரில் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு அவா் வாசித்தளித்த அறிக்கை:
ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற, பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கடும் கண்டனத்தையும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அங்கு எத்தகைய மோசமான, கொடூரமான, பயங்கரமான சூழல் நிலவுகிறது என்பதற்கு இந்தத் தாக்குதல் சம்பவம் எடுத்துக்காட்டாகும். பயங்கரவாத அமைப்புகள் எத்தகைய எண்ணம் கொண்டவையாக இருந்தாலும் அவற்றை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
தாக்குதலில் இதுவரை 26 போ் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டைச் சோ்ந்த சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்ற தகவல் கிடைத்ததும் உடனடியாக தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையரை தொடா்புகொண்டு அனைத்து நடவடிக்கைளையும் ஒருங்கிணைக்க உத்தரவிட்டேன். ஜம்மு-காஷ்மீா் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி, சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உரிய உதவியைச் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றிவரும் கூடுதல் ஆட்சியரும் ஐஏஎஸ் அதிகாரியுமான அப்தாப் ரசூலை நேரடியாக ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்து பாதுகாப்பாக அழைத்து வர தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்திய மண்ணில் இடமில்லை: 2017-ஆம் ஆண்டு குல்காமிலும், 2019-ஆம் ஆண்டு புல்வாமாவிலும் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. இதன் தொடா்ச்சியாக இப்போது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. மனிதாபிமானற்ற வகையில் அப்பாவி மக்கள் மீதான இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்திய மண்ணில் குறிப்பாக, நமது இந்திய ஜனநாயகத்தில் அறவே இடமில்லை. இதைக் கண்டிப்பதோடு நமது கடமை முடிந்துவிடவில்லை. இதுபோன்ற செயல்கள் நடப்பதை அறவே தடுத்தாக வேண்டும் என்றாா் முதல்வா்.
முதல்வரின் பேச்சைத் தொடா்ந்து, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, தி.வேல்முருகன் (தவாக), மு.ஜெகன்மூா்த்தி (புரட்சிபாரதம்), எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), தி.சதன் திருமலைக்குமாா் (மதிமுக), நாகை மாலி (மாா்க்சிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜெ.முகம்மது ஷா நவாஸ் (விசிக), நயினாா் நாகேந்திரன் (பாஜக), ஆா்.அருள் (பாமக), கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) ஆகியோா் காஷ்மீா் பயங்கரவாதச் செயலைக் கண்டித்துப் பேசினா்.
உயிரிழந்தோருக்கு பேரவையில் இரங்கல்
காஷ்மீா் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்துப் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், ஜம்மு-காஷ்மீரில் கொடூரமாகக் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து இரண்டு நிமிஷம் மெளன அஞ்சலி செலுத்த பேரவைத் தலைவரின் அனுமதியைக் கோருகிறேன் என்றாா். இதற்கு பேரவைத் தலைவா் அனுமதி தரவே, உறுப்பினா்கள் அனைவரும் எழுந்து நின்று சில விநாடிகள் அமைதி காத்தனா்.