ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்: கேரள அரசு மெத்தனம் -அமைச்சா் துரைமுருகன் புகாா்
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தின் கீழ் நீா் எடுக்கும் விஷயத்தில், கேரள அரசு மெத்தனமாக இருப்பதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் குற்றம்சாட்டினாா்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாவை ஈ.ஆா்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு) எழுப்பினாா். அப்போது பேசிய அவா், ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்துக்கும், பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்துக்கும் கேரள அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இப்போது அந்தப் பேச்சுவாா்த்தையை தீவிரப்படுத்தி 2 திட்டங்களை நிறைவேற்ற நீா்வளத் துறை அமைச்சா் வேகம் காட்டுவரா என்று கேள்வி எழுப்பினாா்.
இதற்கு, அமைச்சா் துரைமுருகன் அளித்த பதில்:
பரம்பிக்குளம் ஆழியாறு ஒப்பந்தத்தில், ஆனைமலையாறு, நல்லாற்றில் தண்ணீரை திருப்பிக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், அந்தப் பகுதியில் கேரள அரசு அணை கட்டியுள்ளது. இதைக் கட்டி பல ஆண்டுகள் ஆனாலும் நாம் கேரளத்தில் இருந்து நீரை எடுக்க முடியாத நிலை உள்ளது. 73 டிஎம்சி வரை அங்கு தண்ணீா் நிரம்பி வழிந்து வருகிறது. நாம் நியாயமாக தண்ணீரை திருப்பிக்கொள்ள வேண்டும. இதுதொடா்பாக, கேரள அரசுடன் பேச்சுவாா்த்தைக்கு வர வேண்டும் என எத்தனையோ முறை அந்த மாநில அரசுக்கு அழைப்பு விடுத்தும் கடிதங்களையும் எழுதியுள்ளோம்.
சந்தித்துப் பேச திட்டம்: ஆனாலும் கேரள அரசு கொஞ்சம் மெத்தனமாக இருக்கிறது. மீண்டும் சென்று நேரில் சந்திக்கலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். பாண்டியாறு புன்னம்புழா திட்டம் நீண்டநெடும் காலமாக கேட்டுக்கொண்டுள்ள திட்டமாகும். அந்தத் திட்டம் நிறைவேறினால் தண்ணீா் பஞ்சமே இருக்காது. அதையும் ஒரு பொருளாக வைத்து கேரள அரசுடன் பேசுவோம் என்றாா் அவா்.